Tuesday, July 28, 2015

தாலாட்டு உரையாடல்

தந்தை:

காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டுக் கேக்கும் என் செல்லமே நீ
    இன்னுமாடி தூங்கவில்ல?

சோந்த மாடும் தூங்கிடுச்சு அங்க
    சுருண்டு நாயும் தூங்கிடுச்சு
ஆந்த மட்டும் முழிச்சுருக்கு  நீயும்
    ஆந்த போல பாக்கறியே!

மகள்:

தூக்கம் இப்போ எனக்கெதுக்கு அப்பா
    தூங்கி நானும் என்ன பண்ண?
பாக்க உலகம் பரந்திருக்கு இங்க
    படுக்க எனக்கு மனசில்லையே

நீயோ எல்லாம் பாத்துபுட்ட நல்லா
    நடப்பதெல்லாம் தெரிஞ்சுகிட்ட
நானோ இன்னும் பச்ச புள்ள எனக்கு
    எல்லாத்தையும் பாக்க வேணும்

தந்தை:

பாக்க உலகம் புதுசுமில்ல இங்க
    நடப்பதொண்ணும் நல்லா இல்ல
பாத்து பாத்தென் மனசும் கூட
    சலிச்சு போச்சு என் செல்லமே

பழசு தாண்டீ எல்லாம் இங்க
    புதுசா பாக்க ஒண்ணும் இல்ல
அழகே என் அம்புஜமே நீ இப்போ
    கண்ண மூடி தூங்கு செல்லம்

மகள்:

உலகம் ரொம்ப பழசு தான்பா இங்க
    உள்ளதெதுவும் சரியில்ல தான் ஆனா
இளமை இப்போ எனக்கிருக்கு இனிமேல்
    நல்லா செய்யும் தெம்பிருக்கு

பாக்க எல்லாம் பழசு தான்பா ஆனா
    பாக்கப் போற கண்ணு புதுசு
பாக்க இங்க எதுவும் இல்ல நாம
    பாக்க பாக்க புதுசாகுமே

தந்தை: 

பொன்னே என் ரத்தினமே என் கண்ண
    திறந்த சித்திரமே
கண்ணே என் கண்மணியே நீ
    சொல்லும் வார்த்தை சத்தியமே

கண்ணத் திறந்த்துட்டேன் டீ இப்போ
    கண்டதெல்லாம் புதுசு தானே
கண்ணே நீயும் தூங்காமலே உன்
    ஆச தீற பாத்துக்கோடீ

மகள்:

அப்பா...

 காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டு நீ படிக்கையில இப்போ
    நானும் கூட தூங்கறேனே

நல்லா அசதியால தூங்கறேனே ...
நல்லா கண்ண மூடி தூங்கறேனே ...


No comments: