Thursday, November 20, 2008

வெற்றிச் சங்கெடுத்து விண்முட்ட ஊதுவீர் 
பற்றென்னும் பண்டைப் பிசாசறுத்தோம் 
விட்டென்னைப் போயிற்று வல்லுயிர்ப் பேய் 
தொட்டென்னைத் தழுவியது தூய மெய்யழகு

பேய் கொன்றோம் பொய்க் கவலைப் பிணம் தின்னும்
நாய் கொன்றோம் நொந்த நான் கொன்றோம் 
தாய் கொன்றோம் தாய் குடத்துச் சேய் கொன்றோம் 
நோய் கொன்றோம் நமன் வென்றோம் காணீரோ

இறந்திடுவோம் என்றொரு மொழி இனியும் கூறாதீர் 
பிறந்திட்டோம் பயன் பெறுவோம் பார்தனிலே 
அறஞ் செய்வோம் ஆனந்தம் பல அடைவோம் 
உரமேற்றி உள்ளத்தே தீ வளர்ப்போம்

சோதி தனைச் சேர்த்தொரு காதல் செய்வோம் 
ஆதி அரன் நாமே அன்னை அவளே அன்பால் 
ஓதி ஒன்றாவோம் உடலழித்து உயிர் வளர்ப்போம் 
மேதினியெங்கும் மலர்ந்திட்டக் காண்போம்

அறிவும் அழகும் அமுதக் குடமும் அலகில்லாது
எரியும் எண்ணத் தெளிவும் எழில்மிகு நிலவும் 
புரியும் விணையெல்லாம் புண்ணியமாய்ப் பொழியும் 
விழி கொண்டு வாழ்வெல்லாம் வளம்பெறச் செய்வோம்

வேள்வித் தீயிது நம் வாழ்க்கை உயிரின் 
வாளெடுத்து விணையென்னும் நோயறுப்போம் 
கோளில்லை குணமில்லை குற்றமேதுமில்லை 
நீள்கின்ற நினைவெல்லாம் நித்திய சோதியே

உள்ளம் நிலவாகும் உயிரெல்லாம் ஒளிக்குன்றாம் 
அள்ளக் குறையாத அமுதம் விண்ணெங்கும் 
வெள்ள்த் திரளாக உணர்வெல்லாம் பொங்கிடுமே 
தெள்ளத் தெளிவாக தரணியெல்லாம் தெரிந்திடுமே

Tuesday, September 09, 2008

கல்யாணி

நள்ளிரவு. உலகம் புளியமரத்தின் பொந்தினில் ஒளிந்து உறங்கி கொண்டிருந்தது. விட்டத்தில் நிலவு சிதறிப் போன மண்டையோட்டின் கண்ணைப் போல் வெறுமையாய் சிரித்தது. இருட்டு அந்த சிறு குடிசையை முழுமையாய்த் தழுவி மூச்சு முட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மூலையில், விரகத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருந்தது ஒரு லாந்தர் விளக்கு. கண்ணன் விழிப்புக் கலந்த உறக்கத்தில் புரண்டு படுத்தான்.  

வாலில் கல்லைக் கட்டின தட்டாம் பூச்சியைப் போல் இமைகள் இழுத்தன. ஆனால் கொல்லையில் இருந்து கல்யாணியின் முனகல் தூக்கத்தை சிறு விரல்களால் விலக்கியது. கல்யாணி... அவளையும் சேர்த்து அந்த வீட்டில் உறக்கத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த ஜீவன்கள் மூன்று. இருட்டு முத்துவின் சிவந்த கண்களை மறைத்த போதும், அவற்றின் பக்கம் பார்க்க பயந்து தூங்குவது போல் நடித்தான் கண்ணன். தான் பெற்ற பிள்ளையிடம் தன் மனசாட்சியின் விசுவரூபத்தை முதல் முறை பார்த்து அரண்ட பெற்றொர் பட்டியலில் கண்ணன் இன்று சேர்ந்தான். பயம்... அவன் வாசலில் மரணத்தின் ரூபத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. அரண்டு திரும்பி ஓடினால் கொல்லையிலும் பாவ மூட்டையோடு நின்று கொண்டிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்னால் சுவற்றில் பல்லி ஒன்று பட்டாம்பூச்சியை ஓரங்கட்டி பார்வையால் உறைய வைத்து பின் விழுங்கியது நினைவுக்கு வந்தது. இன்று ஒரு மூலையில் இவன், இன்னொரு மூலையில் கல்யாணி இருவருமே மெல்ல உறைந்து கொண்டிருந்தனர்.  

கல்யாணி, ஆறு மாதம் வயதாகும் சிறு குழந்தை. பொழுது விடிந்து பொழுது சாயும் வறை பார்த்துக் கொண்டே இருக்கக் தூண்டும் முழு நிலவு முகம் கொண்ட சின்ன மல்லிகை மொட்டு.  

'நெத்தியில பார்த்தியா? என்ன அழகா ஒத்த சுருள் விழுதுன்னு? ஆத்தாளே வந்து புறந்துருக்கா டா.'  

பாட்டிக் கிழவி பொக்கை வாய் பிளக்க சொன்னாள். இரண்டு ஆண்டு சோறு போட்டு வளர்த்தால் ஆயுள் முழுதும் குருதியைப் பாலாய் கடைந்து கொடுக்கும் ஜெர்சி ரகம். நான்கு பேர் இருந்த அந்த குடும்பத்திற்கே அமுதசுரபியாய் இருந்த தனலட்சுமியின் முதல் பிள்ளை கல்யாணி. தனலட்சுமி செட்டியாரின் அரக்காணியில் தெற்கு மூலையில் பாம்பு கடித்து செத்து மூன்று மாதம் ஆகிறது. இப்பொழுது கொல்லையில் ஒவ்வொரு முனகலும் கடைசி முனகல் போலத் தோன்ற மண்டையுள் செருகிய கண்களோடு கல்யாணி. அழுதுச் சிவந்த கண்களொடு முத்து. மிதமான குறட்டையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் பொன்னாத்தாள்.  

'நாலு நாளா இழுத்துட்டிருக்கு. பட்டனத்துலருந்து வந்து போக டாக்கிட்டருக்கும் மருந்துக்குமே இருக்கர காசு எல்லாம் கரஞ்சுடும் போலருக்கு. கலியன் கிட்ட கொடுத்தா காதும் காதும் வச்ச மாதிறி வெட்டி வித்துடுவான். ரெண்டு நாள் சோறுக்காகும்யா. சொன்னாக் கேளு. பாவம் புண்ணியம் பார்த்தா பொழைக்க முடியாது. பச்ச புள்ள அவன் சரியா சாப்ட்டு நாளாகுது. இந்த மாடு கன்னு எல்லாத்தையும் தலை முழுகிட்டு ஒழுங்கா பேக்ட்டரில போய் வேலை பாருய்யா. சொல்லிட்டேன் ஆமா!' 

விளக்கமாறை உள்ளங்கையில் குத்தியவாறு சொல்லி முடித்தாள் பொன்னாத்தாள். கனவுகளையெல்லாம் பதினோறு வயதில் மூட்டைக் கட்டி வாழ்க்கை சக்கரத்தில் சிச்சி சக்கையாய் விழுந்தவள். ஒரு காலத்தில் மின்மினிப் பூச்சி போல் மின்னிய கண்கள் இப்பொழுது கருங்குழிகளாய்க் கிடந்தன. காதலில் சிறுத்து, தாய்மையில் பெறுத்த இடை, இப்போது வறுமையில் தேய்ந்து போயிருந்தன. மனமும் அது போல் கரியதாய் சிறியதாய் மாறி விட்டது. ஆனால் அவள் கூட கசாப்புக் கடைக்காரன் விஷயத்தை முத்து இல்லாத போல் தான் சொல்லத் துணிந்தாள். கண்ணாடியின் முன்னே தவறு செய்ய எல்லாரும் தயங்கினார்கள்.  

பொத்தல் விழுந்த போர்வையை உதறி விட்டு எழுந்தான் கண்ணன். அறை மணி கழிந்து விட்டது. கல்யாணிக்கு நீராகாரம் கொடுக்க வேண்டும். லாந்தரைக் கையில் எடுத்த்க் கொண்டு கொல்லைக்கு சென்றான். ஒரு நிமிடம் உலகமே நிசப்தமாய் இருந்தது. கண்ணனுக்கு இதயம் வெடித்து விடும் போலிருந்தது. பயமும் நிம்மதியும் அவனுக்கு ஒரு அடி முன்னே தூண்டி போலிழுத்தன. 'நீ நிம்மதியாப் போயிடு செல்லமே... என்னை கசாப்புக் கடைக்கு இழுத்துடாதே மா' என்று ஒரு குரல். 'ஆத்தா இன்னும் ஒரு நாலு மணி நேரம் இழுத்துப் புடி ஆத்தா, டவுனுக்குப் போய் வைத்தியர கூட்டியாந்துடறேன்' என்று கெஞ்சியது இன்னொரு குரல்.  

லாந்தரை தரையில் வைத்து உற்றுப் பார்த்தான். கண்களிரண்டும் முழுசாய் செருகி விட்டன. கால் கொஞ்சம் விரைப்பாய் இருந்தது. பச்சைப் பவழம் போல் ஜொலித்த தொண்டை மட்டும் மெதுவாக இழுத்துக் கொண்டிருந்தது. 

'ஆத்தா உனக்குப் பொங்கல் வக்கறேன் எதாச்சும் பண்ணி புழைக்க வச்சுடும்மா' 

அவசரமாய் ஒரு வேண்டுதலை சொல்லிக் கொண்டே ·பீடிங் பாட்டிலை எடுத்தான். வாய் உடும்பைப் போல் ஒட்டிக் கொண்டிருந்தது. விரல்களால் பிளந்து நிப்பிளை செருகினான். அவ்வளவு குலுகோசும் தாரையாய் தரையில் வழிந்தோடியது.  

ஒரு நிமிடம் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. முதுகில் எதோ உறுத்தல். அழுகையை சற்றே மறந்து கதவின் பக்கம் திரும்பினான். சத்தமே இல்லாமல் வந்து முத்து விழித்துப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்தான். கிழிந்த டவுசர் பாக்கெட்டில் ஒரு விரல் நோண்டிக் கொண்டிருந்தது. ஒரு கை பரட்டைத் தலையை சொறிந்து கொண்டிருந்தது. கண்களில் கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் அழுகை...  

'இன்னும் தூங்கலியா தம்பி?' கண்ணன் குரல் லாந்தரோடு நடுங்கியது. 

கண்ணைக் கல்யாணி மீது வைத்துக் கொண்டே இல்லையென்று தலையாட்டினான் முத்து. 

'போய் தூங்கு தம்பி. நான் பாத்துக்கறேன்.' கல்யாணியின் இழுக்கும் கழுத்தை தடவி நம்பிக்கை வரச் செய்ய முயற்சி செய்தான்.  

பதிலே பேசாமல் பக்கத்தில் வந்து குந்தினான் முத்து. கண்கள் இமைக்காமல் மேலும் கீழும் போகும் அந்த தொண்டையயே உற்றிப் பார்த்தான். 

'அப்பா கல்யாணிய கசாப்புக் கட கலியனுக்கு குடுக்கப் போறியா?' தலை நிமிறாமல் கேட்டான். 

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது கண்ணனுக்கு. வியர்வை முத்து அவமானத்தோடு நெற்றியில் வழிந்தது.  

'இல்ல தம்பி. யாரு சொன்னாங்க இதெல்லாம்?'  

'கருப்பன் சொன்னான். கலியன் மத்தியானமே வந்து பாத்துட்டு போனதப் பார்த்தான் அவன்.' 

தரையில் கோலம் வரைந்து கொண்டிருந்தான் முத்து. கண்ணனுக்கு ஊசியால் உள் நெஞ்சில் கிழிப்பது போலிருந்தது. முத்துவை வாரி அணைத்தான்.  

'இல்ல தம்பி. கல்யாணிய எவனுக்கும் கொடுக்க மாட்டேன் நான். கொடுக்க மாட்டேன்' என்று கதறினான்.  

பதினைந்து நிமிடம் கழிந்தது. சொல்லிலும் செயலிலும் ஏமாறாத முத்து, நான்கு சொட்டுக் கண்ணீரில் நம்பிக்கை வைத்து தோளிலே தூங்கிப் போயிருந்தான். இன்னும் விசும்பிக் கொண்டே படுக்க வந்தான் கண்ணன்.  

'என்னய்யா? இன்னும் இழுத்துட்டுருக்கா?' 

சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள் பொன்னாத்தாள். 

பதில் பேசாமல் படுத்தான்.  

'சொன்னா கெளுய்யா. பொழுது விடிஞ்ச உடனே போயி கலியனப் பாரு'  இடுப்பை சொறிந்தாள்.  

'கல்யாணி எங்கேயும் போறதில்ல புள்ள. கலியன் நாளைக்கு வந்தான்னா சொல்லி அனுப்பிச்சிடு. இன்னொரு தரம் என் புள்ளையப் பார்க்க கசாப்புக் கத்தியோட வந்தா வெட்டிடுவேன்' 

தீடிரென்று கண்ணன் கண்ணில் கனல். கோவத்தோடு திரும்பி பார்த்தாள் பொன்னம்மாள். அவன் கண்களை ஒரு முறை பார்த்தாள். சொல்ல வந்தவள் எதையோ முனுமுனுத்துக் கொண்டே திரும்பி படுத்தாள். 

********************************* 

பொழுது விடிந்து சிரித்துக் கொண்டிருந்தது. சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தெருவின் மூலையில் வேப்பங்குச்சியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். பகலின் மிதமான வெம்மையில் சற்றே தெம்பு வந்தது. புழுதியின் நடுவே சூரியன் கண்ணாமூச்சி ஆடியதைப் பார்க்கையில் இரவின் கண்ணீரெல்லாம் பனியாப் போனது. கடசியாய் கல்யாணியப் பார்த்த போது கருவிழி சற்றே தெரிந்தது போல் ஒரு எண்ணம். அஞ்சு மில்லி பாலும் உள்ள போயாச்சு. வாயைக் கொப்புளித்து விட்டு சட்டையைப் போட வீட்டுக்குள் போகத் தயாறானான்.  

'அப்பா!!!!!!' 

கொல்லைக் கதவைக் கிழித்துக் கொண்டு வந்தது முத்துவின் குரல். கண்ணனின் அடி வயிறு ஒரு தரம் தொண்டயில் வந்து எட்டிப் பார்த்தது. தடுக்கி விழுந்து ஓடினான். கொல்லையில் கண்ட காட்சியைப் பார்த்து ஒரு நிமிடம் சப்த நாடியும் ஒடுங்கியது.  

குந்திக் கொண்டிருந்த முத்துவின் கையைப் படுத்துக் கொண்டே நக்கிக் கொண்டிருந்தாள் கல்யாணி. கருவிழி இரண்டும் முக்கால்வாசி தெளிவாய்த் தெரிந்தன. வற்றிப் போன வாயில் லேசாய் ஈரம் சொறிந்தது. காலை கதிரொளியில் கல்யாணி நச்சுக் குளத்திலிருந்து மெல்ல முளை விட்டுக் கொண்டிருந்த தாமரை மொட்டு போல் இருந்தாள். உயிர், அவன் கண் முன்னே மரணத்தின் பிடியை விட்டு மெதுவாக வந்து கொண்டிருந்தது.  

'ஆத்தி மாட்டுக்கு நெத்தில சுருள் கெட்டி தான் போங்க' 

பொன்னாத்தாள் சாளரத்தில் பார்த்தவாறே சொன்னாள். வாய் பேசாமல் அந்த இரண்டு பிள்ளைகளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் திடீரென்று கத்தினான். அடி வயிற்றிலிருந்து திரண்டு வந்த நிம்மதி, ஆனந்தம், செறிக்காத பயத்தின் வாந்தி, இன்னும் பல ஆயிறம் உணர்வுகள் பொங்க, மனித அறிவை இழந்து அசுரக் கத்தல் கத்தினான். பயம் பிடித்தக் குதிரையைப் போல் புறப்பட்ட சப்தம், தடுமாறி தடுக்கி விழுந்து விம்மும் அழுகையாய் உளறல் சிரிப்பாய் பிரிந்தது. பொன்னாத்தாள் புரியாமல் விழித்தாள். இருக்கும் சக்தியெல்லாம் வெளியேறி மூச்சு வாங்கினான் கண்ணன். கதவினைப் பிடித்து சாய்ந்து முகம் நிமிர்ந்து முத்துவைப் பார்த்தான். முத்து புன்னகைப் பூத்தான். கண்ணனிடம் தொற்றியது புன்னகை. இருவரும் கல்யாணியப் பார்த்தனர். அவளும் மெதுவாய் முறுவலிப்பது போல் இருந்தது.  

********************************** 

'லேசு பட்ட கன்னுக்குட்டி இல்லலே இது. செத்துப் புழச்சுருக்கு. என் வைத்தியம் எதுவுமில்லை, எல்லாம் மாரியாத்தா சக்தி' விரிந்த கண்களோடு படபடவென பேசினார் டவுன் வைத்தியர். 'இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு குலுகோஸ் குடுத்துட்டு இரு. படுக்கற இடத்த அடிக்கடி சுத்தம் பண்ணி வச்சுக்கோ. கொஞ்சம் கவனம் வேணும். நாலு நாளா ஆகாரம் இல்லை அதனால் கொஞ்சம் நொஞ்சானா இருக்கும். ஒரு வாரம் கழிச்சு மேய கூட்டிட்டு போ. அதுக்கு முன்னாடி நான் வந்து பார்க்கறேன்' பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு அறிவுரை சொன்னார்.

பொன்னியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்து விழுந்து கும்பிட்டான் கண்ணன். பொன்னாத்தாள் பானையில் அரிசியும் சிரிப்பும் சேர்ந்து கொப்புளித்தது. இரண்டு நாள் சாப்பாட்டுக் காசை ஒரே வேளையில் இலையில் இரைத்தனர். முத்து கண்ணனின் மடியில் உக்கார்ந்து சாப்பிட்டான்.

இரவும் வந்தது. தெருவோரத்து மல்லிகை கொடி இலவசமாய்க் காற்றை சுத்தமாக்கியது. நான்கு நாள் உறங்காத உறக்கத்தை சேர்த்து வைத்து தூங்கினான் கண்ணன். எல்லாமே இன்று வரம்பு மீறி பொங்கியது அந்த வீட்டில். கனவும் கூட வர முடியாத இரும்பு உறக்கக் கோட்டையில் ஒதுங்கினர் அனைவரும். கல்யாணி முனகாது, சீறாக மூச்சு விட்டு, கண்கள் நிம்மதியாய் மூடித் தூங்கினாள்.  

***********************************  

கண்ணன் கண் விழித்தப் போது கிழக்கு குருதி சொரிந்து கொண்டிருந்தது. பகலவன் தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்தான். கைகளை முறித்துக் கொண்டு கொல்லைக்கு சென்றான் கண்ணன். கல்யாணி படுத்த நிலையிலே இருந்தாள். அசைக்க முடியாத ஆழ்ந்த உறக்கம். அருகில் ஒரு காக்கா தரையில் எதையோ கொத்திக் கொண்டிருந்தது. சூ! என்று விரட்டிக் விட்டு அருகில் சென்றான் கண்ணன். தரையில் செம்மண் இட்டிருந்தது. கல்யாணியின் வயிற்றிலிருந்து கழிவு போல் நூல் நூலாய் ஏதோ வெளியே விழுந்து கிடந்தது.  

கண்ணனுக்கு முட்டியில் திடீரென்று வலு அற்றது. சரிந்தான் தரையில். குடல் சரிந்த கல்யாணியைப் பார்த்தான். கொட்டகையின் மூங்கிலில் தொற்றிக் கொண்டு காக்கை அவனைப் பார்த்தது. உள்ளே முத்து 'அப்பா.. அப்பா... ' என்று மழலைக் குரலில் தேடிக் கொண்டே எழுந்தான். குரல் கேட்டக் காக்கை பறந்தது. கண்ணன் பதறி கதவைப் பார்த்தான். இன்னும் சில நொடிகள் தான். முத்து வந்து விடுவான் கொல்லைக்கு.

Tuesday, June 10, 2008

பொன் - முற்று பகுதி

அரவம் எழுந்தது மாணிக்கம் கக்கியது!
உள்ளத்தே செம்மை பிறந்தது!
மாலை மனதோடு இயைந்தது!

ஆகா!
இது ஞான வானிடை சுரக்கும் அமுத ஊற்று!
ஆகா!
இது உள்ளத்திற் பிறந்து உலகத்தே விரிந்த
கவியின் கற்பனை!
ஆகா!
இது படைப்புக் கோலத்தில் பராசக்தி இடும் செம்மண்!
ஆகா!
இது ஆகாயத்திடை கலக்கும் ஆலய மணியோசை!
ஆகா!
இது தவச் சிவன் மேல் அனங்கன் எய்த ஆனந்த பாணம்!

மாலையே! மதன வடிவே!
மோகனமாய்ச் சிரிக்கும் பொற்சிலையே!
கையிரண்டில் சேர்க்க முடியா புதையலே!
கண் மூடி உன்னைக் கலக்கிறேன்!
இனி
என் மனமெல்லாம்
பொன்! பொன்! பொன்!
ரசம்! ரசம்! ரசம்!

Monday, June 09, 2008

பொன் - பகுதி முன்று

தளையனைத்தும் உடைந்தது
தங்கம் தரணி மக்கள் முகமெங்கும் மலர்ந்தது
வினையும் பயனும் இன்பத்தே இணைந்தன
தென்றல் தேர் ஏறி வலம் வந்தாள்
கலகம் கலக்கம் குழப்பம் இல்லா
பரசிவக் குளத்தில்
பராசக்தி கல்லொன்று எறிந்தாள்
படைப்பு பிறந்தது

அழகுக் கடல் ஆசை அலையால்
ஆயிரம் முறை சிவன் நெஞ்சில் அறைந்தாள்
மீண்டும் மீண்டும் தோள் தழுவி
கலவி கற்று களித்தாள்

புள்ளெல்லாம் பயன் பெற்று
பிறவி நீங்கி
பொன்னம்பல கூட்டிற்கெய்தின
உலகெல்லாம் உய்வுற்று
காரணம் காரியம் கருத்தொன்றிலாத
இன்ப சோதியாய் மலர்ந்தது

உள்ளப் பாற்கடலில்
உறக்க நாக சயனத்தில்
உரைக்க முடியா சோதியவன்
அழகு
இன்பம்
ஆசை
என்னும் அலையோசையில்
மயங்கி
மன்மதக் கனவில் முழ்கி
காரணம் அழிந்த குருடனாய்
குறிக்கோள் கெட்ட செவிடனாய்
முயற்சியற்ற மூடனாய்
எம்முள் எரிந்தான்

Wednesday, June 04, 2008

பொன் - பகுதி இரண்டு

விசும்பின் விளிம்பில்
உருண்டு
திரண்டு
விம்மி
களியாய் காதலாய் கரும்பாய்
வழியாய் வேட்கையாய் வேதனையாய்
வனப்பாய் அழகாய் உருவாய்
நின்ற அத்துளி
ஐயத்தே ஒரு நொடி ஊசல் கொண்டது
மறு நொடி மனம் தெளிந்தது

விடுக்கென்று பாசம் விட்டு
பந்தம் அற்று
துன்பம் கொன்று
ஆசை வென்று
காமம் கடந்து
விண்ணின் வெளியில் வெடித்துச் சிதறி
மாலை
எனும் மதன ரூபமாய் பிறந்த்ததே
அம்மாவோ!
அமுதம் எங்கும் வழிந்ததே!

Monday, June 02, 2008

பொன் - பகுதி ஒன்று

ஆகாயம்
வெட்ட வெளிக்கெல்லாம் வெளி நின்ற வேள்விக் களம்
அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆனந்தப் பிரவாகம்
கண் முடிப் பார்த்தால் தெரியும் கற்பக விருட்சம்
மோனம் எனும் பாலை முடிவின்றிச் சுரக்கும் காமதேனுவின் மடி இழுக்கின்ற முச்சின் பிறப்பிடம்
அண்டத்தை ஒன்றிப் படரும் மதன மல்லிகைக் கொடி

இவ்வானில் இங்கே ஒரு முலையில்
முளைத்ததொரு தங்கத் துளி
பரமனவன் பட்டறையில்
பதமாய் உருக்கி பாவைச் சிலையாய் வடிக்க வைத்த
பசும் பொன் திரளில்
திமிரி ததும்பி தப்பிய துளி
மிதமான ஒளி
கண்ணை மயக்கும் கதகதப்பு
தனத்தின் வனப்பு
என
கன்னியாய் காட்டு தேவதையாய்
காமக் களஞ்சியமாய்த் தோன்றிய
கதிரின் துளி

பகல் என்னும் தந்தையின் கைபற்றி
பருவ வெறியோடு நிற்கும்
இரவுக் காதலனை நோக்கித்
தடுமாறி நிற்கும் துளி
பந்தமும் பாசமும் பற்றி
ஆசையும் களியும் கண்டு
அன்னலிற் தவிக்கும் மானிடத் துளி

Tuesday, April 22, 2008

கேள்வியின் நாயகியே

கண்மணியே காதலியே காத்திருக்கும் கவிக்குயிலே
கண்ணினிலே கேள்விதனை கூட்டி வைக்கும் காரிகையே
என்னைவிட்டு எங்கெய்தினாய் யாதியற்றினாய் என்று
கண்ணினிலே கேள்விதனை பூட்டி வைக்கும் பேரழகே

கேள்!

பொன்னமுதாய் பொழிந்திடும் ஓர் தனலைக் கண்டேன்
விண்ணதனைத் தழுவி நிற்கும் விருட்சம் கண்டேன்
எண்ணமெல்லாம் ஏற்றம் செய்யும் ஒளியக் கண்டேன்
கன்னமிரண்டும் சிவந்த வான் பெண்ணைக் கண்டேன்

கூட்டிற்கே விரைந்த்தோடும் சிட்டுக் குருவிகள்
கூட்டு சேர்ந்த்தே விளையாடும் சுட்டிச் சிறுமிகள்
தீட்டுகின்ற கதிரால் சிவந்த குட்டி அருவிகள்
காட்டுகின்ற மாலைப் பொழுதில் எல்லாம் கண்டேன்

விந்தை ஓராயிரம் வானில் கண்டேன்
சிந்தை சேர்ந்திடும் சத்தியம் கண்டேன்
முந்தைக் கவிஞன் மூத்த கம்பன் உவமை
இந்த மாலைப் பொழுதில் மலரக் கண்டேன்

காணுகின்ற பொருளிலெல்லாம் பெண்ணழகே என்னவளே
தோன்றுகின்ற காட்சியொன்றே என்றெண்ணித் தெளிந்த்தேன்
நாண்கின்ற வான்மகளை மீண்டும் கண்டேன்
தேனிறங்கும் நின்னழகை நாடி ஓடி வந்த்தேன்