Tuesday, July 28, 2015

கலைமகளோர் கைம்பெண்

வெள்ளையுடை அணிவாள் வெறுமையிற் அமர்ந்திருப்பாள்
அள்ளும் பொருட்செல்வம் அண்டாத கன்றிருப்பாள்
விண்ணவனின் துணையாவாள் வார்த்தை பேசாள்
வெண்ணிலவை வரச் செய்த வல்லீ அபிராமி கடைக்
கண்ணியைந்த கவிஞருக்கே கலைமகளோர் கைம்பெண்

விளக்கம்:

வெண்ணிலவை இருண்மதி  (அமாவாசை) அன்று வரச் செய்த அபிராமவல்லீயின் கடைக்கண் பெற்ற கவிஞருக்குக்

கலைமகளோர் கைம்பெண் (விதவை) ஆவாள்.

எங்கனம்?

கலைமகள் கைம்பெண் இருவருமே வெள்ளையுடை தரிப்பவர்கள்.

கலைமகள் அண்டங்களைக் கடந்த வெறுமையில் சுத்த அறிவாய் வீற்றிருபாள்.
கைம்பெண் அர்த்தமில்லாத பழைய சாத்திரதுக்குக் கட்டுப்பட்டு மூலையில் வெறுமையில் வீற்றிருபாள்.

கலைமகள் பொருட்செல்வம் மிகுந்த இடத்தில் அகன்றிருப்பாள்.
கைம்பெண் பொருட்செல்வத்தின் குறியெல்லாம் தவிர்த்திருப்பாள்.

கலைமகள் விண்ணவனான் பிரம்மனின் துணைவியானாள்.
கைம்பெண் இறந்து விண்ணவனான தன் கணவனின் துணைவியானாள்.

கலைமகள் மோனத்தே இருப்பாள்.
கைம்பெண் கணவனை இழந்த துயரில் வார்த்தை பேசாதிருப்பாள்.

தாலாட்டு உரையாடல்

தந்தை:

காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டுக் கேக்கும் என் செல்லமே நீ
    இன்னுமாடி தூங்கவில்ல?

சோந்த மாடும் தூங்கிடுச்சு அங்க
    சுருண்டு நாயும் தூங்கிடுச்சு
ஆந்த மட்டும் முழிச்சுருக்கு  நீயும்
    ஆந்த போல பாக்கறியே!

மகள்:

தூக்கம் இப்போ எனக்கெதுக்கு அப்பா
    தூங்கி நானும் என்ன பண்ண?
பாக்க உலகம் பரந்திருக்கு இங்க
    படுக்க எனக்கு மனசில்லையே

நீயோ எல்லாம் பாத்துபுட்ட நல்லா
    நடப்பதெல்லாம் தெரிஞ்சுகிட்ட
நானோ இன்னும் பச்ச புள்ள எனக்கு
    எல்லாத்தையும் பாக்க வேணும்

தந்தை:

பாக்க உலகம் புதுசுமில்ல இங்க
    நடப்பதொண்ணும் நல்லா இல்ல
பாத்து பாத்தென் மனசும் கூட
    சலிச்சு போச்சு என் செல்லமே

பழசு தாண்டீ எல்லாம் இங்க
    புதுசா பாக்க ஒண்ணும் இல்ல
அழகே என் அம்புஜமே நீ இப்போ
    கண்ண மூடி தூங்கு செல்லம்

மகள்:

உலகம் ரொம்ப பழசு தான்பா இங்க
    உள்ளதெதுவும் சரியில்ல தான் ஆனா
இளமை இப்போ எனக்கிருக்கு இனிமேல்
    நல்லா செய்யும் தெம்பிருக்கு

பாக்க எல்லாம் பழசு தான்பா ஆனா
    பாக்கப் போற கண்ணு புதுசு
பாக்க இங்க எதுவும் இல்ல நாம
    பாக்க பாக்க புதுசாகுமே

தந்தை: 

பொன்னே என் ரத்தினமே என் கண்ண
    திறந்த சித்திரமே
கண்ணே என் கண்மணியே நீ
    சொல்லும் வார்த்தை சத்தியமே

கண்ணத் திறந்த்துட்டேன் டீ இப்போ
    கண்டதெல்லாம் புதுசு தானே
கண்ணே நீயும் தூங்காமலே உன்
    ஆச தீற பாத்துக்கோடீ

மகள்:

அப்பா...

 காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டு நீ படிக்கையில இப்போ
    நானும் கூட தூங்கறேனே

நல்லா அசதியால தூங்கறேனே ...
நல்லா கண்ண மூடி தூங்கறேனே ...


Thursday, July 23, 2015

கிறுக்கல்



செந்தமிழ்ப் பழகும் செந்நாப் புலவனுக்கும் தன் கரம் பற்றி
தன் கோல் எடுத்துத் தன் மகள் கிறுக்கும் கோடே கவி 

மேகபோகம்

ஏகத்திருக்கும் வானத்தே இடம் பெயர்ந்து
தாகத்தில் நீர் குடித்து நாகமாய்க் கருத்த
மேகத்தே தோன்றும் மழை

ஏகத்திருக்கும் மோனத்தே இடம் பெயர்ந்து
தேகத்தெழுந்த தீயினில் யாகமாய் வளர்த்த
மோகத்தே தோன்றும் முத்தி

Friday, July 03, 2015

களைத்து வந்தேன்

களைத்து வந்தேன் அம்மா கடவூர் அம்மா
கடைத்தேற வழி சொல்லாயோ என் அம்மா

களைந்தும் வந்தேன் அம்மா கடவூர் அம்மா
உடை உடல் உயிர் உறு உணர்வெல்லாம் வெறுத்து
விடை வழி விடுதலை தருவாயே என் தாயே என்று
மலை மடு மாநிலம் எல்லாம் தேடிப் பின் ஓடி (களைத்து வந்தேன்)

அலைவதற்கொர் இடமுமில்லை அகத்தினிலே துணிவுமில்லை
நிலையானவளே முழு நிலவானவளே எனக்குமோர்
நிலையருளாயோ நீயிரங்காயோ நீலி நினை நாடி
உலை கொதி நீரென உலகினிலே உழைத்து உழன்று (களைத்து வந்தேன்)