Monday, January 29, 2007

இறுதி

துன்பத்திற்கு இறுதி இன்பமாம்
ஆசைக்கோர் இறுதி அன்பிலாம்
பண்பிற்கு இறுதியது பயனிலாம்
பாட்டிற்கு இறுதியது கூத்திலாம்

சொல்லிற்கு இறுதியே பொருளிலாம்
சாத்திரத்திற்கு இறுதி சமத்திலாம்
விள்ளற்கோர் இறுதி வாழ்க்கையாம்
வினைதனிற்கு இறுதி விடுதலையாம்

காதலிற்கு இறுதியெனில் கலத்தலில்
காலத்திற்கோர் இறுதியும் கலத்தலில்
சாதலிற்கு இறுதியெனில் சத்தியமே
சொல்வேன் எனக்கொரு இறுதியெனில் சக்தியே

Monday, January 08, 2007

காதல், இன்பம், ஒரு கவிதை

இன்பமாய் இனிமையாய் ஒரு மாலைப் பொழுது
தோட்டதிலமர்ந்து,
ஒவ்வொரு கனவாய்
ஒவ்வொரு கனவாய்
தென்றலிலே தோய்த்தெடுக்கும் மாலைப் பொழுது

அண்டமெல்லாம் ஆடிக் களித்து
ஒன்றான ஆனந்தமாய் அனந்தமாய் இன்பமாய்
வெடித்துச் சிதறி ஓடி, ஆடிப்பாடி, சிரித்துக் குலுங்கி
பூத்து, காய்த்து, பழுத்து பலவாய் பரந்து கூத்தடிக்க
ஓரிடத்தில் நானமர்ந்து ரசிக்கும் மாலைப் பொழுது.

ஆங்கே,

விளையாட்டில் சில பெண்கள்.
வயதும் வனப்பும் வளமையும் கூடி
வடிவாய் சில பெண்கள்குழந்தை மூன்று குமரி நான்கு என
விளையாட்டில் சில பெண்கள்

கண்கட்டி ஒரு விளையாட்டு
அதன் பின்,
நொண்டியாய் ஒரு விளையாட்டு
ஒருத்தி துரத்த மற்றோர் ஓட
பல பல விளையாட்டு.

சிரிப்பும் ச்ருங்காரமும்
கூத்தும் கைதட்டலும்
கோலாகலமாய் விளையாட்டு
கீகீ எனும் சிறுகுருவிகளைப் போல்பெருத்த ஆராவரத்துடன் விளையாட்டு
காணக் காண இன்பம் தரும் விளையாட்டு

இதைக் காண்கையில்,
கவிஞன் எனக்கோர் துணிவு
கற்பனை தரும் துணிவு
கண்மூடிக் கருத்தில் காணும் துணிவு

தோட்டத்திலேயோர் ஊர்வலம் கண்டோம்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்
காதல் இன்பம் கவிதை என்னும்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்

காதல் இன்பத்தின் தாய்
கவிதைக்கு இன்பம் தாய் அறிவு தந்தை
காதல் அசையாதது
காதல் அசைந்தால் இன்பம்
இன்பம் இயங்காதது
இன்பம் இயங்கினால் கவிதை
காதல் சக்தியாம்
இன்பம் சிவமாம்
இன்பம் சக்தியாம்
காதல் சிவமாம்
கவிதை முக்தியாம்

காதல் மலர்ந்தால் இன்பம்
இன்பம் கனிந்தால் கவிதை
காதல் உயிர் இன்பம் மூச்சு
கவிதை உணர்வு
உயிர் அசைந்தால் மூச்சு
மூச்சு இயங்கினால் உணர்வு

உயிர் பொருளற்றது
குறியொன்றுமில்லை உயிர்க்கு
உயிர் 'அது'வாகும்
உயிர் அதுவாயிருப்பது காதல்
காதல் குறியற்ற பொருளற்ற நிலை
காதல் கருவாகும்
உலக விளையாட்டின் மூலம் காதல்
ஒன்றானது காதல்

ஒன்று தன் பயன் துய்ப்பது இன்பம்
ஒன்று இரண்டாகி பின் மீண்டும்
ஒன்றாக விழைவது இன்பம்
உயிரின் குறி முச்சு
காதலின் குறி இன்பம்
வெளியிருக்கும் காற்று உள்சென்று
சக்தியாவது மூச்சு
வெளியிருக்கும் துன்பம் உள்சென்று
சக்தியாவது இன்பம்
காற்றே மூச்சாகும்
துன்பமே இன்பமாகும்
மூச்சுவிட மறந்தால் மரணம்
இன்பம் துய்க்க மறந்தால் மரணம்
மூச்சு உயிர் நிலையில் நிற்பது அமைதி
இன்பம் காதலில் நிற்பது சோதி

சோதி தரும் சுடரே கவிதை
ஒன்றும் இரண்டும் கலந்து களித்து காட்சியாகி
இச்சை தீர்ந்து இயங்குவது கவிதை
மூச்சு அறிவால் இயங்குவது கவிதை
இன்பத்தின் வழி வருவதே கவிதை
கவிதைக்கு என்றும் ஒரே தாய் - இன்பம்
மூச்சின் வெளிப்பாடு வாழ்வு
இன்பத்தின் வெளிப்பாடு கவிதை
வெளிப்படாத முச்சு விஷமாகும்
வெளிப்படாத இன்பம் விஷமாகும்
சீரோடு வரும் மூச்சு யோகம்
சீரோடு வரும் இன்பம் கவிதை

காதல் ஒளி இன்பம் சுடர் கவிதை விளக்கு
காதல் ஆதாரம் இன்பம் இசை கவிதை பாட்டு
காதல் கடவுள் இன்பம் பக்தி கவிதை முக்தி

விரிந்து கிடக்கும் பரம்பொருள் காதல்
சிலையில் சிரிக்கும் சக்தி இன்பம்
சிலையில் அவளைக் கண்டால் கவிதை

கண் திறக்கிறேன்
கன்னியர் தம் ஆட்டம் முடித்தனர்
என் கையினில் இப்பொழுது
காதல் மலர்ந்து
இன்பம் கனிந்து
கவிதை தவழ்கிறது