Tuesday, August 20, 2013

காயத்ரி ஜபம்


இடக்கண் திறந்து இறந்த காலம் நோக்கி
இயம்புவன் அவளை நினைவாய் நினைத்து

வலக்கண் திறந்து வாழும் காலம் நோக்கி
வணங்குவன் அவளை அறிவாய் அறிந்து

நடுக்கண் திறந்து நாளை நோக்கி
நாடுவன் அவளை கற்பனை அமைத்து

முக்கண் திறந்து முடிவில்லாக் காலத்திணைந்த
மூவுலகும் கண்டு துதிப்பேன் அவளை சக்திஎனப் பாடி

முக்கண் மூடி மனத்தேயொன்றி முக்காலம் மறைந்து
எக்காலமும் ஏற்றுவன் அவளை நான் எனும் பெயரால்

In English - http://agnibarathi.blogspot.in/2013/08/gayatri-japam.html

Tuesday, June 25, 2013

செய்க வினை


செய்க விணை செய்க விணை செய்க விணை செய்கவே - என்றும்
தோய்வின்றி சோர்வின்றி துயர் நீங்க துணிவோடு தவமாக (செய்க)

பொய்யுரையோம் புறம் பேசோம் பயமழிப்போம் விணை செய்தால்
உய்வடைவோம் உயர்வடைவோம் உயிர் வாழ்வோம் எனவே என்றும் (செய்க)

விணையல்லால் இங்கு நமக்கோர் வழியில்லை வாழ்வில்லை
விணை செய்தால் நமக்கென்றும் வலியில்லை சாவில்லை நமக்குத்
துணை நாமே நம் விணையே அவளுரைக்கும் நல்விணையே எனவே
திணையே ஆனாலும் துயர்  நீங்க  துணிவோடு தவமாக (செய்க)

தவமாகும் செய்த வினை தாயவள் துணையிருந்து தவத்திற்கு
வரம் தருவாள் வழியுரைப்பாள் விணை தீர்ப்பாள் வளம் செய்வாள்
அறத்தொடு அன்பும் அழகும் அகத்தே கொண்டு அயராது விணை செய்தால்
அவள் அருள் புரிவாள் அகத்திருப்பாள் அணைத்திருப்பாள் எனவே (செய்க)

Monday, April 29, 2013

கல்யாணி



In plain text

யாம் யார் ஏன் வந்தோம் எங்கு செல்வோம் என்பதறியா

யாம் யாமே வந்து விட்டோம் செல்லவும் செய்வோம்
என உரைத்து ஓம் இஃதே வழி  இஃதே என உணர்வாயா

யாம் படைத்த மகனே எனைப் படைக்கும் படைப்பே
பேறு பெற்றிட்ட பரசிவக்குளத்தில் மூழ்கி உரைப்பாயா

யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே

யாம்

ஓம்

பி.கு: 

1. கவிதையை செப்பனே வரைந்திட பல முயற்சி மேற்கொண்டு கை வலிக்க எழுதிய வைதேஹிக்கு பல நன்றிகள்!

2. கவிதையின் தலைப்பு "கல்யாணி" என அமையும் காரணம் அறிய படிக்க https://en.wikipedia.org/wiki/Temple_tank

Monday, March 25, 2013

பித்தன் (பட்டன்) கதை




திருக்கடவூரில் சுப்ரமணியம் என்றொரு பித்துப் பிடித்த அந்தணன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு பெரும்பாலும்,

கண் காணாது.
செவி கேளாது.
வாய் பேசாது.

எப்பொழுதும்,

நா சுவைக்காது.
நரம்பு உணராது.

இப்படியிருந்த இந்த அந்தணனை

எள்ளுதலும்
நகையாடுதுலம்
கேலி பேசுதலும்

ஊர் வழக்கு.

இது எதுவும் அறியாத அவன்

நாளும்
பொழுதும்
காலமும்

மறந்து

நிலத்திலும்
நீரிலும்
நெருப்பிலும்

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான், அதனால் அதனை மட்டும் கண்டிருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே கண்டிருந்தான் அதனால் அதனை அவன் விண்டாதிருந்தான்.

அவ்வண்ணம் கண்டும் கண்டதை விண்டிலாதும் இருந்த அப்பித்தனை

மராத்த  மன்னர்,
தஞ்சை கொண்ட தரணியரசர்,
வீர சிவாஜி வழி வந்த வீர வேந்தர்,
கலை வளர்த்த காவலர்,
நூலகம் தந்த நாவலர்,
பகைவர் அஞ்சும் பகலவர்

காண நேர்ந்த்தது. பித்தன் என பலரும் ஏசும் இம்மனிதன் பயமின்றித் தன வழியே  இருத்தல் கண்டு,

"யார் இவன்? எவறிவார்? எவருரைப்பார்?"

என வினவ, கூடியிருந்த மக்காள்,

பித்தன்
பெருமான்
புலவன்
பக்தன்

என் பல கூறினர். குழம்பிய மன்னன், பித்தனிடமே,

"யார் நீர்?", என வினவினார்.

.
.
.

மீண்டும், "பெயர் என்ன?" என் வினவினார்.

.
.
.

பின்னரும், "ஏதும் அறிவீரோ?" என்றும் வினவினார்.

.
.
.

கடைசியில், "இன்று திதி யாது?" என்று வினவினார்.

அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தன்

கண்டான்.
கேட்டான்.

'முழுமதியோன்றே! முழுமதியோன்றே! முழுமதியோன்றே!' என்று பேசினான்.

'இருட்டில் நிலவினைக் கண்டீரோ. பித்தன் தாம் போலும். முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக' என்று  நகைத்து மன்னன் நகர்ந்தான்.


அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தனுக்கு,

கண்டதும்
கேட்டதும்
பேசியதும்

பொய் எனத் தோன்றவில்லை. வாள் கையில் ஏந்தி, அன்னை முன் சென்று

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என இடையறாது மனதிற் துதித்தான்.

துதியினூடே பித்தம் சித்தத்திலேறி பாட்டு பலவும் படித்தான்.

பாட்டினூடே பரசக்தியவள் அவன் முன்னே தோன்றினாள்.

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என்று சொன்னவன்,

"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"

எனக் கூவினான்.

அதன் பின்னர் அவன் பிதற்றிய பாடலைப் புகழ்ந்தனர் பலர்.
அவன் பாடிய அன்னையைப் புகழ்ந்தனர் பலர்.
அவனை ஏசிய மன்னனை ஏசினர் சிலர்.

நிலவு வந்ததா? அம்மாவாசை இரவு பௌர்ணமி ஆனதா? பித்தன் கூற்றை பராசக்தி பலிக்கக் செய்தாளா?

பராசக்தியைக் கண்ட பின் பித்தனுக்கே அதில் அக்கறை இல்லை.

நமக்கேன்?


பாட்டின் புகழ்


வையத்து மாந்தர்காள் கேளீர்
வையத்தில் உண்டு வாழ வைக்கும் அமுதமொன்று!

சிந்தைதனை மத்தாக்கி ஆசைக் கடலிடை
சித்தமதை அரவமாய்க் கட்டி
இன்பமோர் புறம் துன்பமோர் புறம் பற்றி
பற்றற்ற அகத்தினிலே பரமனையிருத்தி

பல காலம் இழுத்தோர் வேள்வி செய்தால்...

விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!
மிடிமையும் அச்சமும் சோர்வும் கவலையும் கலந்த
விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!

அதனை

அப்படியே அருந்தி அகத்திலே இருத்தி
அமைதியாய் பொருத்தி அசையாது கொண்டால்

அமுதம் தோன்றும்! ஆம்! ஆம்!
அமுதம் தோன்றுமே! ஆகா!
அது நித்தம் தோன்றுமே!
இங்கும் அங்கும் தோன்றுமே!
அமுதம்
இன்றும் என்றும் தோன்றுமே!

அமுதத் தமிழ் கவிதையது ஆசைக் கடல் அடியிருந்து
அழகாய் அறிவாய் இசையாய் சொல்லாய் பொருளாய்
கருத்தென்னும் கலசத்திலே காதலென்னும் கன்னியவள் ஏந்தி வர

அமுதமது  தோன்றுமே!
பாட்டென்னும் அமுதமது தோன்றுமே!
நாம் பழுதின்றி பருகிடப பல்சுவைப்
பாட்டென்னும் அமுதமது

அரியவன் அன்னையாய் அன்னையே அப்பனாய்
அழகென்னும் மோகினியாய் நமக்கு மட்டுமே
பகிர்ந்துப் பருகிடத் தர
பராசக்தியவளைக் கண்டப் பரவசமாய்
பாட்டெனும் அமுதமது பழுதின்றித் தோன்றுமே!

அதனைப் பருகி பருகி
பரவசமாகி
சொல்லிழந்து
பொருளிழந்து
அறிவிழ ந்து
கருத்திழந்து
சித்தமிழந்து
தன்னையே தானிழந்து
கண் திறந்து பார்த்தால் எல்லாம்

ரசம்! ரசம்! ரசம்!

Thursday, January 24, 2013

திண்ணம்



அன்றொரு நாள் இளமைத் தீயில்
சுட்டெரித்தேன் பற்பல வாச மலர்களை

மல்லிகைக் காதல்
செம்பருத்தி மோகம்
தாமரை அறிவு

இன்று வயது கூடுகிறது
எழுத்தாணி முனையில்
பழஞ் சாத்திரத்தின் பனையோலைகள்
எரிந்து சாம்பலாகின்றன

எது எப்படியோ
எரித்தல் திண்ணம்
எரிவதும் திண்ணம்

In English - http://agnibarathi.blogspot.in/2013/01/destiny.html


Saturday, January 05, 2013

வரம் தாரும்


பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

இறப்பும் இனிமையே நீர் படைத்த உலகில்
சிறப்பும் செல்வமும் சுடர் தரும் கதிரும்
துறவும் துயிலும் துன்பமும் துயரும்
பரவும் நின் படைப்பில் மீண்டும் (பிறக்கும் வரம்...)

நெல் நட்டு நல்லரிசி பயிர் செய்யும் உழவனாய்
சொல் நட்டு சுடரோடு விளையாடும் புலவனாய்
தொல்  கடலில் துணிந்தோடி திரிவியம் தேடு வணிகனாய்
அல்லலும் அமைதியும் அமுதென பலவாறு அள்ளிக் குடிக்க (பிறக்கும் வரம்...)

முக்தியொன்றும் தேவையில்லை முக்தியொன்றும் தேவையில்லை
சித்ததிற்கொர் விருந்தாம் சாகா மருந்தாம் வாழ்விதனில் பரா
சக்தியவளும் தேவையில்லை செந்தமிழ்ப் பாட்டதனின்
தித்திப்பே போதும் பாடல் செய் புலவன் பெயர் தேவையில்லை

எனவே

பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்