Showing posts with label பிள்ளைத் தமிழ். Show all posts
Showing posts with label பிள்ளைத் தமிழ். Show all posts

Friday, October 14, 2016

மீனாட்சி தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மீன்விழியே மரகதமே மாமதுரை நாயகியே
தேனே தேன்மொழியே தேன் ஒழுகும் பூவிதழே
தேன் ஒழுகும் பூவிதழே தென்மதுரை நாயகியே
நான் எழுதும் தமிழ் கேட்டு கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்மணியே கண்ணுறங்கு கற்பகமே கண்ணுறங்கு
தென்மதுரை ஊராளும் சின்னவளே கண்ணுறங்கு
சின்னவளே தென்னவளே என்னவளே என்னுயிரே
பண்ணெடுத்து நான் பாட பால் நிலவே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

பால் நிலவே பனிமலையே பாம்பிருக்கும் சடை முடியே
ஆலிலையில் மிதந்து வரும் மாலவனின் பூந்தங்காய்
மாலவனின் பூந்தங்காய் மாவிலையின் நிறமுடையாய்
கோலத்தமிழ் நான் பாட கள்ளழகே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கள்ளழகே சொல்லழகே நள்ளிரவின் நிலவழகே
கள்ளிருக்கும் கண்ணழகே சொல்லழியும் சிலையழகே
சொல்லழியும் சிலையழகே பிள்ளைத் தமிழ்ப் பாட்டழகே
பிள்ளைத் தமிழ் நான் பாட கிளியழகே கண்ணுறங்கு

கிளியழகே கொடியழகே புதுகுத்துவிளக்கழகே
விளையாடும் வைகையிலே களியாடும் நீரழகே
களியாடும் நீரழகே கோலோச்சும் அரசழகே
தாலாட்டு நான் பாட மீன்விழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

Wednesday, September 21, 2016

புறா பாட்டு


புறா புறா குட்டிப் புறா
கூரை மேலே குந்தும் புறா
வாலை ஆட்டி ஆடும் புறா
வானத்திலே போகும் புறா

அம்மா புறா ஒன்னு அப்பா புறா ஒன்னு
குட்டி குட்டி குட்டி புறா மொத்தம் இங்கே மூணு
அம்மா அப்பா ரெண்டும் பாலை ஊட்டும் பாரு
பாலைக் குடிச்சு குட்டி பறந்து போகும் பாரு

எனக்கு புடிச்ச நல்ல புறா
அரிசி கொத்தும் செல்ல புறா
என்னத் தேடி வந்த புறா
எங்க வீட்டின் சொந்த புறா

Tuesday, July 28, 2015

தாலாட்டு உரையாடல்

தந்தை:

காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டுக் கேக்கும் என் செல்லமே நீ
    இன்னுமாடி தூங்கவில்ல?

சோந்த மாடும் தூங்கிடுச்சு அங்க
    சுருண்டு நாயும் தூங்கிடுச்சு
ஆந்த மட்டும் முழிச்சுருக்கு  நீயும்
    ஆந்த போல பாக்கறியே!

மகள்:

தூக்கம் இப்போ எனக்கெதுக்கு அப்பா
    தூங்கி நானும் என்ன பண்ண?
பாக்க உலகம் பரந்திருக்கு இங்க
    படுக்க எனக்கு மனசில்லையே

நீயோ எல்லாம் பாத்துபுட்ட நல்லா
    நடப்பதெல்லாம் தெரிஞ்சுகிட்ட
நானோ இன்னும் பச்ச புள்ள எனக்கு
    எல்லாத்தையும் பாக்க வேணும்

தந்தை:

பாக்க உலகம் புதுசுமில்ல இங்க
    நடப்பதொண்ணும் நல்லா இல்ல
பாத்து பாத்தென் மனசும் கூட
    சலிச்சு போச்சு என் செல்லமே

பழசு தாண்டீ எல்லாம் இங்க
    புதுசா பாக்க ஒண்ணும் இல்ல
அழகே என் அம்புஜமே நீ இப்போ
    கண்ண மூடி தூங்கு செல்லம்

மகள்:

உலகம் ரொம்ப பழசு தான்பா இங்க
    உள்ளதெதுவும் சரியில்ல தான் ஆனா
இளமை இப்போ எனக்கிருக்கு இனிமேல்
    நல்லா செய்யும் தெம்பிருக்கு

பாக்க எல்லாம் பழசு தான்பா ஆனா
    பாக்கப் போற கண்ணு புதுசு
பாக்க இங்க எதுவும் இல்ல நாம
    பாக்க பாக்க புதுசாகுமே

தந்தை: 

பொன்னே என் ரத்தினமே என் கண்ண
    திறந்த சித்திரமே
கண்ணே என் கண்மணியே நீ
    சொல்லும் வார்த்தை சத்தியமே

கண்ணத் திறந்த்துட்டேன் டீ இப்போ
    கண்டதெல்லாம் புதுசு தானே
கண்ணே நீயும் தூங்காமலே உன்
    ஆச தீற பாத்துக்கோடீ

மகள்:

அப்பா...

 காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டு நீ படிக்கையில இப்போ
    நானும் கூட தூங்கறேனே

நல்லா அசதியால தூங்கறேனே ...
நல்லா கண்ண மூடி தூங்கறேனே ...


Wednesday, December 31, 2014

எலிப் பாட்டு




எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
நெளி வால் ஆட நள்ளிரவதனில்
    குடுகுடுவெனவே ஓடும் எலியே 

குருகுருவேன்றே குடையும் கண்ணால் 
    மூங்கில் படியின் கைப்பிடி வழியே 
துருதுருவென்றே துருவித் தேடி 
    தாவிக் குதிக்கும் தந்திர எலியே

சரசரவெனவே சன்னல் விளிம்பில்
    சடுதியில் ஓடி வெளியே தாவி
கரகரவென்னும் காரைப் புல்லில் 
    நொறுக்குத்தீனி தின்னும் எலியே 

துரத்தும் நாய்கள் ஐயோ பாம்பு 
    திடீரென இரவில் பளிச்சிட்டும் விளக்கு
பறக்கும் ஆந்தை பாயும் பருந்து
    எதற்கும் அஞ்சா துணிச்சல் எலியே 

எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
எலியே எங்கள் தோழன் நீயே
    என்றும் எம்முடன் சேர்ந்திருப்பாயே