Monday, March 30, 2015

நாயாகும் சிவனே

திரிவது காடு தின்பது பிணமாம்
உடுப்பது வானே சாம்பல் அணியே
கடவூர் நிலவை நித்தம் காணும்
பித்தருக்கெல்லாம் நாயாகும் சிவனே

விளக்கம்:

கடவூரின் நிலவாய் அமைந்த அபிராமி என்னும் நிலவை
எப்பொழுதும் மனதில் காணும் பித்து பிடித்தவருக்கு
நாயும் சிவனும் ஒன்றாம்.

எங்கனம்?

இருவரும்

திரியும் இடம் காடாகும்.
உணவாவது பிணமும் புலாலும் (மாமிசம்).
உடை வானமாகும் (அதாவது நிர்வாணம்).
அணியும் அணிகலன் புழுதியும் சாம்பலாகும்.

ஆங்கிலத்தில் விளக்கம்: (English meaning)

For the men who are afflicted with the madness of seeing the full moon that resides in TirukkadavUr (Abirami),
the dog and Siva are one.

How?

They both,

Live and roam in graveyards.
Eat corpses and flesh.
Wear nothing but the sky.
Adorn themselves in dust and ashes.

கோடைப் பாட்டு

வாராய் கோடையின் வெயிலே - வந்து
தீராய் எங்கள் துயரே
வாடைக் குளிரின் பகையே - நீ
தாராய் உந்தன் நகையே

கூதிர் குளிரில் நடுங்கி - எங்கள்
குரம்பை ஓய்ந்ததொடுங்கி
பாதி உயிராய் தேய்ந்தோம் - சோம்பற்
நோயிற் உழன்று மாய்ந்தோம்

நீரின் தாகம் மறந்தோம் - நீடு
நிழலின் அறுமை மறந்தோம்
காரின் கருணை மறந்தோம்
வாழ்வின் குறியை இழந்தோம்

சோதிக் கனலே வருக - எங்கள்
நாடி நரம்பும் உருக
உறைந்த உதிரம் உயிர்க்க - எம்
மேனியெல்லாம் வியர்க்க

நீ

வருவாய் கோடைத் தீயே வந்
தெரிப்பாய் எங்கள் நோயே
தருவாய் வேள்வித் தீயே - அதில்
இடுவாய் உயிரின் நெய்யே

பழைமை மடமை கொன்று - சோம்பற்
பகையை வீழ்த்தி வென்று
உழைப்பை உயிரில் நடுவாய் வீண்
உறக்கம் உடலில் கெடுப்பாய்

வெப்பம் வியர்வை வெயில் - இவை 
யாவும் வினையின் குறியாம் 
வினையில் இயைந்த உயிர்க்கு நீ 
உணர்வாய் உரமாய் வருவாய் 

அன்னை சக்தியின் தீயே - உலகை 
உழன்றிடச் செய்யும் நோயே 
உழைப்பிற்க்கெல்லாம் தாயே 
எம்மை பாடிடப் பணித்திடுவாயே