Friday, October 14, 2016

மீனாட்சி தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மீன்விழியே மரகதமே மாமதுரை நாயகியே
தேனே தேன்மொழியே தேன் ஒழுகும் பூவிதழே
தேன் ஒழுகும் பூவிதழே தென்மதுரை நாயகியே
நான் எழுதும் தமிழ் கேட்டு கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்மணியே கண்ணுறங்கு கற்பகமே கண்ணுறங்கு
தென்மதுரை ஊராளும் சின்னவளே கண்ணுறங்கு
சின்னவளே தென்னவளே என்னவளே என்னுயிரே
பண்ணெடுத்து நான் பாட பால் நிலவே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

பால் நிலவே பனிமலையே பாம்பிருக்கும் சடை முடியே
ஆலிலையில் மிதந்து வரும் மாலவனின் பூந்தங்காய்
மாலவனின் பூந்தங்காய் மாவிலையின் நிறமுடையாய்
கோலத்தமிழ் நான் பாட கள்ளழகே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கள்ளழகே சொல்லழகே நள்ளிரவின் நிலவழகே
கள்ளிருக்கும் கண்ணழகே சொல்லழியும் சிலையழகே
சொல்லழியும் சிலையழகே பிள்ளைத் தமிழ்ப் பாட்டழகே
பிள்ளைத் தமிழ் நான் பாட கிளியழகே கண்ணுறங்கு

கிளியழகே கொடியழகே புதுகுத்துவிளக்கழகே
விளையாடும் வைகையிலே களியாடும் நீரழகே
களியாடும் நீரழகே கோலோச்சும் அரசழகே
தாலாட்டு நான் பாட மீன்விழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

Saturday, October 08, 2016

நீ எங்கே?

அம்மா நீ எங்கே?
அழகான
அம்மா நீ எங்கே?
அழுகின்றேன்
அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?
நான் ஈன்ற
கன்றே நீ எங்கே?
அழுவாயே
கண்ணே நீ எங்கே?

குளிரிடுதே பயம் வருதே
பசித்திடுதே
அம்மா பசித்திடுதே பால் கொடுக்கும்
அம்மா! அம்மா! நீ எங்கே?

குளிரிடுமே! பயம் வருமே!
பசித்திடுமே!
ஐயோ பசித்திடுமே! பால் குடிக்கும்
கன்றே! என் கண்ணே! நீ எங்கே?

கொஞ்சும் குரல் எங்கே? குழைந்து எந்தன்
முகம் நக்கும் நாவெங்கே? பால்
மண்டும் மடியெங்கே? அம்மா!
அம்மா! நீ எங்கே?

குட்டிக் கொம்பேங்கே? கொம்பின் நடுவிருக்கும்
சுட்டிச் சுருள் எங்கே? மடியை
முட்டிப் பால் குடிக்கும் கண்ணே! என்
குட்டிக் கன்றே! நீ எங்கே?

அசுரன் அடிச்சானோ? அரக்கன் புடிச்சானோ?
அம்மா நான் வரவோ உன்னைக் காப்பாத்த?
ஐயோ முடியலையே அடியும் எடுத்து வைக்க
அம்மா நீ எங்கே? அம்மா நீ எங்கே?

அசுரன் யாருமில்லை. அரக்கன் எவனுமில்லை.
கண்ணே உன்னைக் கொல்லும் கம்சன் கொடும்பாவி
பசுவின் பால் திருடும் மனுஷப் பேய் தானே,
கண்ணே நீ எங்கே? கண்ணே நீ எங்கே?

அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?

இனியும் செய்யலாமோ

இனியும் செய்யலாமோ தங்கமே.   இன்னுயிர்க் கொலை
கனியும் காயுமுண்டு பசி தீர்க்க இனியும் செய்யலாமோ

பிணியன்றோ பாவம் பழுதன்றோ தங்கமே
இனிய விலங்கெல்லாம் விலங்கிட்டு உயிர் குன்றி
கொடிய வாழ்வெய்தி கொம்பறுத்து வாலறுத்து
தனியே தவித்தழுதால் தங்கமே தவறன்றோ எனவே (இனியும்...)

கண்ணுண்டு காண்பதற்கு காதுண்டு கதறல் கேட்பதற்கு
எண்ணும் மனமுண்டு எவர் வலியும் உணர்வதற்கு
கண்டால் குலை நடுங்கும் தங்கமே கேட்டால் உயிர் உருகும்
உண்ணவும் மனம் வருமோ  உண்மை நீ அறிந்தால் பின் (இனியும்...)

புலையர்க்கு விடுதலை செய்தொம் பெண்டிற்கும் விடுதலையாம்
அலை கடல் சூழ் அவனியிலே அனைவர்க்கும் விடுதலையாம்
உலை படும் உயிர் மட்டும் தங்கமே உடலுறுகி உணர்வறுத்து
தளை பட்டு தவிதிருந்தால் தவரன்றோ தங்கமே (இனியும்...)

Wednesday, September 21, 2016

புறா பாட்டு


புறா புறா குட்டிப் புறா
கூரை மேலே குந்தும் புறா
வாலை ஆட்டி ஆடும் புறா
வானத்திலே போகும் புறா

அம்மா புறா ஒன்னு அப்பா புறா ஒன்னு
குட்டி குட்டி குட்டி புறா மொத்தம் இங்கே மூணு
அம்மா அப்பா ரெண்டும் பாலை ஊட்டும் பாரு
பாலைக் குடிச்சு குட்டி பறந்து போகும் பாரு

எனக்கு புடிச்ச நல்ல புறா
அரிசி கொத்தும் செல்ல புறா
என்னத் தேடி வந்த புறா
எங்க வீட்டின் சொந்த புறா

Sunday, August 14, 2016

சாக்கடையோர் கங்கை நதி

பூதளத்தின் பாவமெல்லாம் தான் சுமக்கும்
    மலம் அகற்றும் மண(ன)ம் அழிக்கும்
பாதளத்தின் அடிபாயும் பொங்கி எழும்
    நஞ்சினூடே தான் ஓடும் நன்னிலவை
சீதளமாய் நுதலணிந்த சுந்தரியாம்
   ஆபிராமவல்லியின் அழகிய தாள் அல்லிப்
பூதளத்தைப் பற்றித் தொழும் பித்தருக்கே
    சாக்கடையோர் கங்கை நதி

விளக்கம்:

அல்லிப் பூவின் இடமான அபிராம வல்லியின்  அழகிய தாளைப் பற்றித் தொழும் பித்தருக்கு,

கங்கை நதி வெறும் சாக்கடையாம்

எங்கனம்?

கங்கை பூமி மேல் மனிதர் இழைத்த பாவமெல்லாம் சுமக்கும்.
சாக்கடை பூமி மேல் மனிதர் செய்யும் கழிவெல்லாம் சுமக்கும்.

கங்கை நதியில் நீராடினால் முற்பிறப்பின் மணம், வாசனை அழியும்.
சாக்கடை தன் துர்நாற்றத்தினால் (நறு) மணத்தை அழிக்கும்.

கங்கை நதி பாதாளம் வரை பாய்ந்து பின் பொங்கி எழுந்தது.
சாக்கடை பாதாளத்தில் ஓடி மலம் மிகுந்து பின் பொங்கி எழும்.

கங்கை நதி சிவனின் சடையிலே ஆலகால நஞ்சிற்கும் அவன் மேனி மேல் ஆடும் பாம்புகளின் நஞ்சிற்கும் இடையே ஓடும்.
சாக்கடை மனிதக் கழிவின் நஞ்சின் இடையே ஓடும்.

Tuesday, May 03, 2016

ஊழிக் கூத்து

 தரிகிட தரிகிட தரிகிட தாம் தாம்
 தரிகிட தரிகிட தரிகிட தாம் தாம்

வருகுது வருகுது ஊழியின் கூத்தே
உருகுது உருகுது வினை சூழ் உலகம்
மருவுது மருவுது மலை நதி நிலமே
சருகென கருகுது வாழ்வின் மரமே

நிலவனி சடையன் நிலை மறந்தாட
சடசட படபட கடகட வெனவே
மலை வயல் வனம் கடல் பாலையாகி
உலை படு மீன் என உருக்குலைந்தனவே

நிலவே கதிரே நட்சத்திரமே
உலவும் கோளே உறையும் வெளியே
வினையின் மரத்தே வீழும் கனியே
களையாய் கணத்தில் அறுபட்டனவே

காலக் களிற்றின் கொடும் பசிப் பிணிக்கே
கானல் அண்டம் ஒரு வாய்ப் பிண்டம்
கையில் எடுத்துக் கனலில் சமைத்துக்
கணத்தில் விழுங்கும் காட்சியைக் காண்! காண்!

தண்டை யுடுக்கைத் தாள் கரம் ஆட
அங்கும் இங்கும் அனல் விழியோட
மண்டை யோட்டில் அமுதம் உண்ணும்
சங்கரன் ஆட்டம்! சங்கரன் ஆட்டம்!

ஆயிரம் சங்கரர் ஆதியின் அன்னை
ஆகா! அழகு விழி சிமிட்டினளே!
ஆயிரம் சங்கரர் ஆயிரம் ஆட்டம்
ஆயிரம் அண்டம் அழிந்தொய்ந்தனவே!

ஆகா! ஆகா! எத்தனை அழிவே!
ஆகா! ஆகா! எல்லாம் அழிவே!
ஆகா! ஆகா! எத்தனை அழகே!
அழிந்திட அழிந்திட அழகே! அழகே!


Thursday, March 24, 2016

சட்டைப் பையில் செத்த சாமிகள்

செங்குருதியில் ஓர் செய்யுள் வடித்தேன்
ஸ்ரீராமன் செத்து மடிந்தான் சூர்ப்பனகையின் மடியில்
கற்பிழந்து களவறிந்து கலவி கூடி.
சீதையோ வனம் ஆண்டாள்
வீடமைத்தாள் விறகொடித்தாள் வினை செய்தாள்
மாலையிலே இசை பயின்றாள் இலங்கேசன் வீணையிலே.

கரு மையில் ஓர் கவிதை செய்தேன்
கண்ணனவன் கோகுலம் விடான்
போர் புரியான் புவியாளான் சூதறியான்
காலைகள் மாட்டுக்கு மதியமோ பாட்டுக்கு
இரவானால் இராதையின் ஈரடிக்குத் தலையணை.
மூப்பெய்தி மதி மழுங்கி பெயரின்றி புகழின்றி
இனிதே இறந்தான் இடைச்சி மகன்.

பசுமை தோயப் பாட்டொன்று படித்தேன்
பரமசிவன் பலசரக்குக் கடை வைத்தான்
பல்லுலகமும் படைத்தழிக்கும்
பராசக்தி பக்கத்து வீட்டில் பல்லிளித்துக் கடன் வாங்கினாள்
பிள்ளைகள் இரண்டும் படித்து ஆளாக வேண்டுமே.
ஆனால் படிப்பில் குறியில்லை பிள்ளைகளுக்கு
மூத்தவனுக்குச் சோறு இளையவனுக்குக் காதல்.

நீர் உன் கடவுள்
பெயரால் கும்பிடுங்கள்
கோவில் கட்டுங்கள்
கொலை செய்யுங்கள்

நான் என் எழுதுகோலை மூடி வைத்தேன்
முப்பத்து முக்கோடி சாமிகளும் மாய்ந்து போயினர்
எல்லாம் என் சட்டைப் பையில்.

In English 

Sunday, February 14, 2016

பரையே போற்றி

பனியைப் படைத்தப் பரையே போற்றி
பனியினைப் படைத்துப் பனியினைப் பருகப்
பரிதியைப் படைத்த பரையே போற்றி

பணியைப் படைத்தப் பரையே போற்றி
பணியினைப் படைத்துப் பணிக் களைப்பாற்றப்
பாட்டினைப் படைத்தப் பரையே போற்றி

கனியைப் படைத்தப் பரையே போற்றி
கனியினைப் படைத்துக் கனிச்சுவை உள்ளே
விதையினை வைத்தப் பரையே போற்றி

பிணியைப் படைத்தப் பரையே போற்றி
பிணியினைப் படைத்துப் பிணியினைப் போக்கத்
துணிவினைப் படைத்தப் பரையே போற்றி

பரமனைப் படைத்தப் பரையே போற்றி
பரமனைப் படைத்துப் பரமனை மாய்க்கும்
பரையினைப் படைத்தப் பரையே போற்றி