Monday, March 25, 2013

பித்தன் (பட்டன்) கதை




திருக்கடவூரில் சுப்ரமணியம் என்றொரு பித்துப் பிடித்த அந்தணன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு பெரும்பாலும்,

கண் காணாது.
செவி கேளாது.
வாய் பேசாது.

எப்பொழுதும்,

நா சுவைக்காது.
நரம்பு உணராது.

இப்படியிருந்த இந்த அந்தணனை

எள்ளுதலும்
நகையாடுதுலம்
கேலி பேசுதலும்

ஊர் வழக்கு.

இது எதுவும் அறியாத அவன்

நாளும்
பொழுதும்
காலமும்

மறந்து

நிலத்திலும்
நீரிலும்
நெருப்பிலும்

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான், அதனால் அதனை மட்டும் கண்டிருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே கண்டிருந்தான் அதனால் அதனை அவன் விண்டாதிருந்தான்.

அவ்வண்ணம் கண்டும் கண்டதை விண்டிலாதும் இருந்த அப்பித்தனை

மராத்த  மன்னர்,
தஞ்சை கொண்ட தரணியரசர்,
வீர சிவாஜி வழி வந்த வீர வேந்தர்,
கலை வளர்த்த காவலர்,
நூலகம் தந்த நாவலர்,
பகைவர் அஞ்சும் பகலவர்

காண நேர்ந்த்தது. பித்தன் என பலரும் ஏசும் இம்மனிதன் பயமின்றித் தன வழியே  இருத்தல் கண்டு,

"யார் இவன்? எவறிவார்? எவருரைப்பார்?"

என வினவ, கூடியிருந்த மக்காள்,

பித்தன்
பெருமான்
புலவன்
பக்தன்

என் பல கூறினர். குழம்பிய மன்னன், பித்தனிடமே,

"யார் நீர்?", என வினவினார்.

.
.
.

மீண்டும், "பெயர் என்ன?" என் வினவினார்.

.
.
.

பின்னரும், "ஏதும் அறிவீரோ?" என்றும் வினவினார்.

.
.
.

கடைசியில், "இன்று திதி யாது?" என்று வினவினார்.

அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தன்

கண்டான்.
கேட்டான்.

'முழுமதியோன்றே! முழுமதியோன்றே! முழுமதியோன்றே!' என்று பேசினான்.

'இருட்டில் நிலவினைக் கண்டீரோ. பித்தன் தாம் போலும். முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக' என்று  நகைத்து மன்னன் நகர்ந்தான்.


அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தனுக்கு,

கண்டதும்
கேட்டதும்
பேசியதும்

பொய் எனத் தோன்றவில்லை. வாள் கையில் ஏந்தி, அன்னை முன் சென்று

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என இடையறாது மனதிற் துதித்தான்.

துதியினூடே பித்தம் சித்தத்திலேறி பாட்டு பலவும் படித்தான்.

பாட்டினூடே பரசக்தியவள் அவன் முன்னே தோன்றினாள்.

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என்று சொன்னவன்,

"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"

எனக் கூவினான்.

அதன் பின்னர் அவன் பிதற்றிய பாடலைப் புகழ்ந்தனர் பலர்.
அவன் பாடிய அன்னையைப் புகழ்ந்தனர் பலர்.
அவனை ஏசிய மன்னனை ஏசினர் சிலர்.

நிலவு வந்ததா? அம்மாவாசை இரவு பௌர்ணமி ஆனதா? பித்தன் கூற்றை பராசக்தி பலிக்கக் செய்தாளா?

பராசக்தியைக் கண்ட பின் பித்தனுக்கே அதில் அக்கறை இல்லை.

நமக்கேன்?


பாட்டின் புகழ்


வையத்து மாந்தர்காள் கேளீர்
வையத்தில் உண்டு வாழ வைக்கும் அமுதமொன்று!

சிந்தைதனை மத்தாக்கி ஆசைக் கடலிடை
சித்தமதை அரவமாய்க் கட்டி
இன்பமோர் புறம் துன்பமோர் புறம் பற்றி
பற்றற்ற அகத்தினிலே பரமனையிருத்தி

பல காலம் இழுத்தோர் வேள்வி செய்தால்...

விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!
மிடிமையும் அச்சமும் சோர்வும் கவலையும் கலந்த
விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!

அதனை

அப்படியே அருந்தி அகத்திலே இருத்தி
அமைதியாய் பொருத்தி அசையாது கொண்டால்

அமுதம் தோன்றும்! ஆம்! ஆம்!
அமுதம் தோன்றுமே! ஆகா!
அது நித்தம் தோன்றுமே!
இங்கும் அங்கும் தோன்றுமே!
அமுதம்
இன்றும் என்றும் தோன்றுமே!

அமுதத் தமிழ் கவிதையது ஆசைக் கடல் அடியிருந்து
அழகாய் அறிவாய் இசையாய் சொல்லாய் பொருளாய்
கருத்தென்னும் கலசத்திலே காதலென்னும் கன்னியவள் ஏந்தி வர

அமுதமது  தோன்றுமே!
பாட்டென்னும் அமுதமது தோன்றுமே!
நாம் பழுதின்றி பருகிடப பல்சுவைப்
பாட்டென்னும் அமுதமது

அரியவன் அன்னையாய் அன்னையே அப்பனாய்
அழகென்னும் மோகினியாய் நமக்கு மட்டுமே
பகிர்ந்துப் பருகிடத் தர
பராசக்தியவளைக் கண்டப் பரவசமாய்
பாட்டெனும் அமுதமது பழுதின்றித் தோன்றுமே!

அதனைப் பருகி பருகி
பரவசமாகி
சொல்லிழந்து
பொருளிழந்து
அறிவிழ ந்து
கருத்திழந்து
சித்தமிழந்து
தன்னையே தானிழந்து
கண் திறந்து பார்த்தால் எல்லாம்

ரசம்! ரசம்! ரசம்!