Tuesday, September 09, 2008

கல்யாணி

நள்ளிரவு. உலகம் புளியமரத்தின் பொந்தினில் ஒளிந்து உறங்கி கொண்டிருந்தது. விட்டத்தில் நிலவு சிதறிப் போன மண்டையோட்டின் கண்ணைப் போல் வெறுமையாய் சிரித்தது. இருட்டு அந்த சிறு குடிசையை முழுமையாய்த் தழுவி மூச்சு முட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மூலையில், விரகத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருந்தது ஒரு லாந்தர் விளக்கு. கண்ணன் விழிப்புக் கலந்த உறக்கத்தில் புரண்டு படுத்தான்.  

வாலில் கல்லைக் கட்டின தட்டாம் பூச்சியைப் போல் இமைகள் இழுத்தன. ஆனால் கொல்லையில் இருந்து கல்யாணியின் முனகல் தூக்கத்தை சிறு விரல்களால் விலக்கியது. கல்யாணி... அவளையும் சேர்த்து அந்த வீட்டில் உறக்கத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த ஜீவன்கள் மூன்று. இருட்டு முத்துவின் சிவந்த கண்களை மறைத்த போதும், அவற்றின் பக்கம் பார்க்க பயந்து தூங்குவது போல் நடித்தான் கண்ணன். தான் பெற்ற பிள்ளையிடம் தன் மனசாட்சியின் விசுவரூபத்தை முதல் முறை பார்த்து அரண்ட பெற்றொர் பட்டியலில் கண்ணன் இன்று சேர்ந்தான். பயம்... அவன் வாசலில் மரணத்தின் ரூபத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. அரண்டு திரும்பி ஓடினால் கொல்லையிலும் பாவ மூட்டையோடு நின்று கொண்டிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்னால் சுவற்றில் பல்லி ஒன்று பட்டாம்பூச்சியை ஓரங்கட்டி பார்வையால் உறைய வைத்து பின் விழுங்கியது நினைவுக்கு வந்தது. இன்று ஒரு மூலையில் இவன், இன்னொரு மூலையில் கல்யாணி இருவருமே மெல்ல உறைந்து கொண்டிருந்தனர்.  

கல்யாணி, ஆறு மாதம் வயதாகும் சிறு குழந்தை. பொழுது விடிந்து பொழுது சாயும் வறை பார்த்துக் கொண்டே இருக்கக் தூண்டும் முழு நிலவு முகம் கொண்ட சின்ன மல்லிகை மொட்டு.  

'நெத்தியில பார்த்தியா? என்ன அழகா ஒத்த சுருள் விழுதுன்னு? ஆத்தாளே வந்து புறந்துருக்கா டா.'  

பாட்டிக் கிழவி பொக்கை வாய் பிளக்க சொன்னாள். இரண்டு ஆண்டு சோறு போட்டு வளர்த்தால் ஆயுள் முழுதும் குருதியைப் பாலாய் கடைந்து கொடுக்கும் ஜெர்சி ரகம். நான்கு பேர் இருந்த அந்த குடும்பத்திற்கே அமுதசுரபியாய் இருந்த தனலட்சுமியின் முதல் பிள்ளை கல்யாணி. தனலட்சுமி செட்டியாரின் அரக்காணியில் தெற்கு மூலையில் பாம்பு கடித்து செத்து மூன்று மாதம் ஆகிறது. இப்பொழுது கொல்லையில் ஒவ்வொரு முனகலும் கடைசி முனகல் போலத் தோன்ற மண்டையுள் செருகிய கண்களோடு கல்யாணி. அழுதுச் சிவந்த கண்களொடு முத்து. மிதமான குறட்டையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் பொன்னாத்தாள்.  

'நாலு நாளா இழுத்துட்டிருக்கு. பட்டனத்துலருந்து வந்து போக டாக்கிட்டருக்கும் மருந்துக்குமே இருக்கர காசு எல்லாம் கரஞ்சுடும் போலருக்கு. கலியன் கிட்ட கொடுத்தா காதும் காதும் வச்ச மாதிறி வெட்டி வித்துடுவான். ரெண்டு நாள் சோறுக்காகும்யா. சொன்னாக் கேளு. பாவம் புண்ணியம் பார்த்தா பொழைக்க முடியாது. பச்ச புள்ள அவன் சரியா சாப்ட்டு நாளாகுது. இந்த மாடு கன்னு எல்லாத்தையும் தலை முழுகிட்டு ஒழுங்கா பேக்ட்டரில போய் வேலை பாருய்யா. சொல்லிட்டேன் ஆமா!' 

விளக்கமாறை உள்ளங்கையில் குத்தியவாறு சொல்லி முடித்தாள் பொன்னாத்தாள். கனவுகளையெல்லாம் பதினோறு வயதில் மூட்டைக் கட்டி வாழ்க்கை சக்கரத்தில் சிச்சி சக்கையாய் விழுந்தவள். ஒரு காலத்தில் மின்மினிப் பூச்சி போல் மின்னிய கண்கள் இப்பொழுது கருங்குழிகளாய்க் கிடந்தன. காதலில் சிறுத்து, தாய்மையில் பெறுத்த இடை, இப்போது வறுமையில் தேய்ந்து போயிருந்தன. மனமும் அது போல் கரியதாய் சிறியதாய் மாறி விட்டது. ஆனால் அவள் கூட கசாப்புக் கடைக்காரன் விஷயத்தை முத்து இல்லாத போல் தான் சொல்லத் துணிந்தாள். கண்ணாடியின் முன்னே தவறு செய்ய எல்லாரும் தயங்கினார்கள்.  

பொத்தல் விழுந்த போர்வையை உதறி விட்டு எழுந்தான் கண்ணன். அறை மணி கழிந்து விட்டது. கல்யாணிக்கு நீராகாரம் கொடுக்க வேண்டும். லாந்தரைக் கையில் எடுத்த்க் கொண்டு கொல்லைக்கு சென்றான். ஒரு நிமிடம் உலகமே நிசப்தமாய் இருந்தது. கண்ணனுக்கு இதயம் வெடித்து விடும் போலிருந்தது. பயமும் நிம்மதியும் அவனுக்கு ஒரு அடி முன்னே தூண்டி போலிழுத்தன. 'நீ நிம்மதியாப் போயிடு செல்லமே... என்னை கசாப்புக் கடைக்கு இழுத்துடாதே மா' என்று ஒரு குரல். 'ஆத்தா இன்னும் ஒரு நாலு மணி நேரம் இழுத்துப் புடி ஆத்தா, டவுனுக்குப் போய் வைத்தியர கூட்டியாந்துடறேன்' என்று கெஞ்சியது இன்னொரு குரல்.  

லாந்தரை தரையில் வைத்து உற்றுப் பார்த்தான். கண்களிரண்டும் முழுசாய் செருகி விட்டன. கால் கொஞ்சம் விரைப்பாய் இருந்தது. பச்சைப் பவழம் போல் ஜொலித்த தொண்டை மட்டும் மெதுவாக இழுத்துக் கொண்டிருந்தது. 

'ஆத்தா உனக்குப் பொங்கல் வக்கறேன் எதாச்சும் பண்ணி புழைக்க வச்சுடும்மா' 

அவசரமாய் ஒரு வேண்டுதலை சொல்லிக் கொண்டே ·பீடிங் பாட்டிலை எடுத்தான். வாய் உடும்பைப் போல் ஒட்டிக் கொண்டிருந்தது. விரல்களால் பிளந்து நிப்பிளை செருகினான். அவ்வளவு குலுகோசும் தாரையாய் தரையில் வழிந்தோடியது.  

ஒரு நிமிடம் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. முதுகில் எதோ உறுத்தல். அழுகையை சற்றே மறந்து கதவின் பக்கம் திரும்பினான். சத்தமே இல்லாமல் வந்து முத்து விழித்துப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்தான். கிழிந்த டவுசர் பாக்கெட்டில் ஒரு விரல் நோண்டிக் கொண்டிருந்தது. ஒரு கை பரட்டைத் தலையை சொறிந்து கொண்டிருந்தது. கண்களில் கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் அழுகை...  

'இன்னும் தூங்கலியா தம்பி?' கண்ணன் குரல் லாந்தரோடு நடுங்கியது. 

கண்ணைக் கல்யாணி மீது வைத்துக் கொண்டே இல்லையென்று தலையாட்டினான் முத்து. 

'போய் தூங்கு தம்பி. நான் பாத்துக்கறேன்.' கல்யாணியின் இழுக்கும் கழுத்தை தடவி நம்பிக்கை வரச் செய்ய முயற்சி செய்தான்.  

பதிலே பேசாமல் பக்கத்தில் வந்து குந்தினான் முத்து. கண்கள் இமைக்காமல் மேலும் கீழும் போகும் அந்த தொண்டையயே உற்றிப் பார்த்தான். 

'அப்பா கல்யாணிய கசாப்புக் கட கலியனுக்கு குடுக்கப் போறியா?' தலை நிமிறாமல் கேட்டான். 

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது கண்ணனுக்கு. வியர்வை முத்து அவமானத்தோடு நெற்றியில் வழிந்தது.  

'இல்ல தம்பி. யாரு சொன்னாங்க இதெல்லாம்?'  

'கருப்பன் சொன்னான். கலியன் மத்தியானமே வந்து பாத்துட்டு போனதப் பார்த்தான் அவன்.' 

தரையில் கோலம் வரைந்து கொண்டிருந்தான் முத்து. கண்ணனுக்கு ஊசியால் உள் நெஞ்சில் கிழிப்பது போலிருந்தது. முத்துவை வாரி அணைத்தான்.  

'இல்ல தம்பி. கல்யாணிய எவனுக்கும் கொடுக்க மாட்டேன் நான். கொடுக்க மாட்டேன்' என்று கதறினான்.  

பதினைந்து நிமிடம் கழிந்தது. சொல்லிலும் செயலிலும் ஏமாறாத முத்து, நான்கு சொட்டுக் கண்ணீரில் நம்பிக்கை வைத்து தோளிலே தூங்கிப் போயிருந்தான். இன்னும் விசும்பிக் கொண்டே படுக்க வந்தான் கண்ணன்.  

'என்னய்யா? இன்னும் இழுத்துட்டுருக்கா?' 

சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள் பொன்னாத்தாள். 

பதில் பேசாமல் படுத்தான்.  

'சொன்னா கெளுய்யா. பொழுது விடிஞ்ச உடனே போயி கலியனப் பாரு'  இடுப்பை சொறிந்தாள்.  

'கல்யாணி எங்கேயும் போறதில்ல புள்ள. கலியன் நாளைக்கு வந்தான்னா சொல்லி அனுப்பிச்சிடு. இன்னொரு தரம் என் புள்ளையப் பார்க்க கசாப்புக் கத்தியோட வந்தா வெட்டிடுவேன்' 

தீடிரென்று கண்ணன் கண்ணில் கனல். கோவத்தோடு திரும்பி பார்த்தாள் பொன்னம்மாள். அவன் கண்களை ஒரு முறை பார்த்தாள். சொல்ல வந்தவள் எதையோ முனுமுனுத்துக் கொண்டே திரும்பி படுத்தாள். 

********************************* 

பொழுது விடிந்து சிரித்துக் கொண்டிருந்தது. சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தெருவின் மூலையில் வேப்பங்குச்சியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். பகலின் மிதமான வெம்மையில் சற்றே தெம்பு வந்தது. புழுதியின் நடுவே சூரியன் கண்ணாமூச்சி ஆடியதைப் பார்க்கையில் இரவின் கண்ணீரெல்லாம் பனியாப் போனது. கடசியாய் கல்யாணியப் பார்த்த போது கருவிழி சற்றே தெரிந்தது போல் ஒரு எண்ணம். அஞ்சு மில்லி பாலும் உள்ள போயாச்சு. வாயைக் கொப்புளித்து விட்டு சட்டையைப் போட வீட்டுக்குள் போகத் தயாறானான்.  

'அப்பா!!!!!!' 

கொல்லைக் கதவைக் கிழித்துக் கொண்டு வந்தது முத்துவின் குரல். கண்ணனின் அடி வயிறு ஒரு தரம் தொண்டயில் வந்து எட்டிப் பார்த்தது. தடுக்கி விழுந்து ஓடினான். கொல்லையில் கண்ட காட்சியைப் பார்த்து ஒரு நிமிடம் சப்த நாடியும் ஒடுங்கியது.  

குந்திக் கொண்டிருந்த முத்துவின் கையைப் படுத்துக் கொண்டே நக்கிக் கொண்டிருந்தாள் கல்யாணி. கருவிழி இரண்டும் முக்கால்வாசி தெளிவாய்த் தெரிந்தன. வற்றிப் போன வாயில் லேசாய் ஈரம் சொறிந்தது. காலை கதிரொளியில் கல்யாணி நச்சுக் குளத்திலிருந்து மெல்ல முளை விட்டுக் கொண்டிருந்த தாமரை மொட்டு போல் இருந்தாள். உயிர், அவன் கண் முன்னே மரணத்தின் பிடியை விட்டு மெதுவாக வந்து கொண்டிருந்தது.  

'ஆத்தி மாட்டுக்கு நெத்தில சுருள் கெட்டி தான் போங்க' 

பொன்னாத்தாள் சாளரத்தில் பார்த்தவாறே சொன்னாள். வாய் பேசாமல் அந்த இரண்டு பிள்ளைகளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் திடீரென்று கத்தினான். அடி வயிற்றிலிருந்து திரண்டு வந்த நிம்மதி, ஆனந்தம், செறிக்காத பயத்தின் வாந்தி, இன்னும் பல ஆயிறம் உணர்வுகள் பொங்க, மனித அறிவை இழந்து அசுரக் கத்தல் கத்தினான். பயம் பிடித்தக் குதிரையைப் போல் புறப்பட்ட சப்தம், தடுமாறி தடுக்கி விழுந்து விம்மும் அழுகையாய் உளறல் சிரிப்பாய் பிரிந்தது. பொன்னாத்தாள் புரியாமல் விழித்தாள். இருக்கும் சக்தியெல்லாம் வெளியேறி மூச்சு வாங்கினான் கண்ணன். கதவினைப் பிடித்து சாய்ந்து முகம் நிமிர்ந்து முத்துவைப் பார்த்தான். முத்து புன்னகைப் பூத்தான். கண்ணனிடம் தொற்றியது புன்னகை. இருவரும் கல்யாணியப் பார்த்தனர். அவளும் மெதுவாய் முறுவலிப்பது போல் இருந்தது.  

********************************** 

'லேசு பட்ட கன்னுக்குட்டி இல்லலே இது. செத்துப் புழச்சுருக்கு. என் வைத்தியம் எதுவுமில்லை, எல்லாம் மாரியாத்தா சக்தி' விரிந்த கண்களோடு படபடவென பேசினார் டவுன் வைத்தியர். 'இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு குலுகோஸ் குடுத்துட்டு இரு. படுக்கற இடத்த அடிக்கடி சுத்தம் பண்ணி வச்சுக்கோ. கொஞ்சம் கவனம் வேணும். நாலு நாளா ஆகாரம் இல்லை அதனால் கொஞ்சம் நொஞ்சானா இருக்கும். ஒரு வாரம் கழிச்சு மேய கூட்டிட்டு போ. அதுக்கு முன்னாடி நான் வந்து பார்க்கறேன்' பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு அறிவுரை சொன்னார்.

பொன்னியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்து விழுந்து கும்பிட்டான் கண்ணன். பொன்னாத்தாள் பானையில் அரிசியும் சிரிப்பும் சேர்ந்து கொப்புளித்தது. இரண்டு நாள் சாப்பாட்டுக் காசை ஒரே வேளையில் இலையில் இரைத்தனர். முத்து கண்ணனின் மடியில் உக்கார்ந்து சாப்பிட்டான்.

இரவும் வந்தது. தெருவோரத்து மல்லிகை கொடி இலவசமாய்க் காற்றை சுத்தமாக்கியது. நான்கு நாள் உறங்காத உறக்கத்தை சேர்த்து வைத்து தூங்கினான் கண்ணன். எல்லாமே இன்று வரம்பு மீறி பொங்கியது அந்த வீட்டில். கனவும் கூட வர முடியாத இரும்பு உறக்கக் கோட்டையில் ஒதுங்கினர் அனைவரும். கல்யாணி முனகாது, சீறாக மூச்சு விட்டு, கண்கள் நிம்மதியாய் மூடித் தூங்கினாள்.  

***********************************  

கண்ணன் கண் விழித்தப் போது கிழக்கு குருதி சொரிந்து கொண்டிருந்தது. பகலவன் தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்தான். கைகளை முறித்துக் கொண்டு கொல்லைக்கு சென்றான் கண்ணன். கல்யாணி படுத்த நிலையிலே இருந்தாள். அசைக்க முடியாத ஆழ்ந்த உறக்கம். அருகில் ஒரு காக்கா தரையில் எதையோ கொத்திக் கொண்டிருந்தது. சூ! என்று விரட்டிக் விட்டு அருகில் சென்றான் கண்ணன். தரையில் செம்மண் இட்டிருந்தது. கல்யாணியின் வயிற்றிலிருந்து கழிவு போல் நூல் நூலாய் ஏதோ வெளியே விழுந்து கிடந்தது.  

கண்ணனுக்கு முட்டியில் திடீரென்று வலு அற்றது. சரிந்தான் தரையில். குடல் சரிந்த கல்யாணியைப் பார்த்தான். கொட்டகையின் மூங்கிலில் தொற்றிக் கொண்டு காக்கை அவனைப் பார்த்தது. உள்ளே முத்து 'அப்பா.. அப்பா... ' என்று மழலைக் குரலில் தேடிக் கொண்டே எழுந்தான். குரல் கேட்டக் காக்கை பறந்தது. கண்ணன் பதறி கதவைப் பார்த்தான். இன்னும் சில நொடிகள் தான். முத்து வந்து விடுவான் கொல்லைக்கு.

6 comments:

Anonymous said...

Oru vaayilla jeevanin vali oru vaarthayilla ullarthukku puriyum...

Cannot say i "liked" the story.. death of a child is always painful.

Beautifully written.

( pardon my bad tamizh..)

Anonymous said...

I had hoped that the story would end happily; but who writes happy ends nowadays?

Your writing is amazing - every description, imagery, comparison, the flow of the story itself are all brilliant and quite lovely; the description of every character is distinct, even though some of them have only mention in one sentence or so.

Your writing and you as a writer manifest a maturity in thinking and deep feeling, besides of course an inordinate talent.

Expecting more here and in your other blogs..

Agnibarathi said...

@JAB - thamizh aRputhamA irukku. un karuththukku mikka nanRi.

@Parvati - 'iniya isai sOgamudaiththu' nAn enna seyya?

Anonymous said...

வணக்கம் அக்னிபாரதி,

நீங்கள் மறுபடி எழுதத் தொடங்கியதில் மகிழ்ச்சி. அவ்வப்போது உங்கள் பாரதி வலைத்தளத்தைப் பார்த்து அங்கு எதுவும் எழுதவில்லை என்பதெல்லாம், இங்கும் எழுதவில்லை என்று எண்ணிக்கொண்டு இருந்துவிட்டேன்.
இழப்பு எனக்கே.

சிறுகதை மிக அழகாக வந்திருக்கிறது.நீங்கள் எழுதியதில் நான் படிக்கும் முதல் சிறுகதை இதுதான். சில மாதங்கள் முன்பு ஆனந்த விகடனில் ‘மரியா காண்டீன்’ என்ற கதையைப் படித்தேன். முருகேஷ் பாபு என்பவர் எழுதியது. அதில் கடைசி வரி : “சாட்சியங்கள் இல்லாததால் தவறுகள் இல்லாமல் போய்விடுமா ?”.

உங்கள் கதை தொட்டும்செல்லும் – பல இழைகளில் இந்த ஒரு இழையும் அடக்கம் என்பது என் புரிதல். அதை வெகுவாக ரசித்தேன். நிஜத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பித்து குழந்தைகளின் ‘பொறுப்பற்ற’ உலகுக்கு செல்ல ஏங்காதவர்கள் அரிது. அந்த உணர்ச்சி நம்மை திமிற வைக்கும் தருணங்கள் யாவும் மிக அழகானவை. அந்த திமிறலை , சட்டை செய்யாமல் உண்மை அடித்துக்கொண்டு ஏகிவிடுகிறது. வலி மிகுந்த தருணம் அது. புனைவில் மட்டும் இதை மாற்ற முடியும். ஆனால் அதை செய்யாமல், நம்பகத்தன்மை, அழகியல் என்ற இரண்டு வித்தை-சமாசாரங்களைத் (craft aspects) தாண்டி உண்மை செய்யும் அசட்டையை அழகாக படம்பிடித்திருக்கிறீர்கள்.

கவிதைமொழியின் சொற்சிக்கனம் இங்கே காணக்கிடைப்பது ரசிக்கும்படி இருக்கிறது.அதே சமயம் ஆழ்ந்த கவனிப்பை கதையில் கோர்க்க சில நுணுக்கமான உவமைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை பல இடங்களில் வலிந்து அடர்த்தியாக எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தை அளிக்கிறது (எ.கா: லாந்தரின் விரகம், கிழக்கின் குருதி – காட்சிக்குறியீடு என்றாலும்) -. கவிதையைவிட கதைகளில் கொஞ்சம் அடர்த்தி கம்மியான தெளிந்த ஓட்டத்துக்கே பழக்கப்பட்ட எனக்கு உள்ள சம்பிரதாய எதிர்பார்ப்பு கூட இதற்கு காரணமாக இருக்கலாம். உரையாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன – குறிப்பாக பொன்னாத்தாளுடையவை. அனேக இடங்கள் ‘கிராமீயம்’ பொருத்தமாக வந்திருக்கிறது. ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள் திருத்திக்கொள்ளலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
பிரபு ராம்

Agnibarathi said...

காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

தங்கள் கருத்துக்களின் ஆழமும் கவனிப்புத் திறனௌம் மிகவும் பிரமிக்கச் செய்கின்றன. தாங்கள் கவனித்து உரைத்த குழந்தை உலகம் மற்றும் சாட்சியற்ற தவறுகளின் இழைகளே கதையை எழுத தூண்டுகோலாய் அமைந்தன.

கவிஞன் கதை எழுத துணிந்தால் என்ன ஆகும் என்பதை நீங்கள் கூறிய criticism மற்றும் சில நண்பர்களின் கருத்தும் உணர்த்துகிறது - எழுதிய பின் நானே சற்றே அதை உணர்ந்தேன். இன்னொரு திருத்திய படிவம் அமைக்கலாம் என்று ஒரு முறை யோசித்தேன். பின்பு தானாய் அடுத்த முறை எழுதினால் திருந்திக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். (Inclining to evolution or laziness? ;-) )

Venkatesh Kumaravel said...

முதலில் தளத்திற்கு இனைப்பு கொடுத்த பிரபுராம் சாருக்கு நன்றி.
கருத்தோட்டம், நுண்ணிய விவரிப்புகள், உவமைத் தோரணம் என செதுக்கப்பட்டிருக்கிறது கதை. ரொம்ப நல்லா வந்திருக்கு. காட்சிப் படிமம், நிகழ்வுகளின் சரம் என அடுக்கவும் செய்திருக்கிறீர்கள். இதை ஏன் 'உரையாடல்' போட்டிக்கு அனுப்பக்கூடாது?