Thursday, September 17, 2015

களிற்றுக்குக் கவிதை

பிடி[1]யினைப் பிடித்திட வழி செய்த களிறே உன்தன்
வடிவினை நினைத்திட நீங்கிடும் இடரே
துடியிடை பனிமுலைப் பாவையின் சேயே மண்ணில்
அறிவென அழகெனத்  தோன்றிடுவாயே

ஆண்டியின் ஆசைக்கெதிர்நின்ற வேழா
ஆண்டியாய் தம்பியை செய்திட்ட தோழா
வேண்டிய நொடியினில் வரம் தனைத் தருக
தோன்றிய மண்ணினில் துளிராய் எழுக

தளிர் மஞ்சள் அரைத்துக் கையினில் பற்றி
துளிர் விரல் கொண்டு களி தரும் சக்தி
வளியிணை ஊட்டி வளர்த்திட்ட வடிவா
துளிரினில் துய்த்து மலரென வா வா

அலர் கதிர் சாயல் அம்மையின் வீரா  
வளர் பிறை அன்ன கோட்டு[2]டை சூரா
நலம் பல  நவம் பல நாட்டினில் இடுக
மலரினில் கனிந்து சுவையெனப் படுக 

பனிமலை உறையும் பரமனின் பிள்ளாய்
எலி நரி பரி[3] கரி[4] எதிலும் உள்ளாய்
துணிவென துணையென வந்திடும் அழக
கனியெனக் கனன்று விதையெனப் படுக

விதையென ஓமென விளங்கிடும் பொருளே
வினையினில் விளைந்திடும் வேள்வியின் தெருளே
கதை கவி செய்திடும் காதலின் தீயே
விதையென மண்ணில் முடிந்திடுவாயே

அருஞ்சொற் பொருள் விளக்கம் 

[1] - பெண் யானை, இப்பாடலின் வரையில் பெண் யானை போல் நடையுடைய குறவள்ளி
[2] - தந்தம்
[3] - குதிரை
[4] - யானை 

No comments: