திருக்கடவூரில் சுப்ரமணியம் என்றொரு பித்துப் பிடித்த அந்தணன் வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு பெரும்பாலும்,
கண் காணாது.
செவி கேளாது.
வாய் பேசாது.
எப்பொழுதும்,
நா சுவைக்காது.
நரம்பு உணராது.
இப்படியிருந்த இந்த அந்தணனை
எள்ளுதலும்
நகையாடுதுலம்
கேலி பேசுதலும்
ஊர் வழக்கு.
இது எதுவும் அறியாத அவன்
நாளும்
பொழுதும்
காலமும்
மறந்து
நிலத்திலும்
நீரிலும்
நெருப்பிலும்
ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான்.
ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான், அதனால் அதனை மட்டும் கண்டிருந்தான்.
ஒரு பொருள் மட்டுமே கண்டிருந்தான் அதனால் அதனை அவன் விண்டாதிருந்தான்.
அவ்வண்ணம் கண்டும் கண்டதை விண்டிலாதும் இருந்த அப்பித்தனை
மராத்த மன்னர்,
தஞ்சை கொண்ட தரணியரசர்,
வீர சிவாஜி வழி வந்த வீர வேந்தர்,
கலை வளர்த்த காவலர்,
நூலகம் தந்த நாவலர்,
பகைவர் அஞ்சும் பகலவர்
காண நேர்ந்த்தது. பித்தன் என பலரும் ஏசும் இம்மனிதன் பயமின்றித் தன வழியே இருத்தல் கண்டு,
"யார் இவன்? எவறிவார்? எவருரைப்பார்?"
என வினவ, கூடியிருந்த மக்காள்,
பித்தன்
பெருமான்
புலவன்
பக்தன்
என் பல கூறினர். குழம்பிய மன்னன், பித்தனிடமே,
"யார் நீர்?", என வினவினார்.
.
.
.
மீண்டும், "பெயர் என்ன?" என் வினவினார்.
.
.
.
பின்னரும், "ஏதும் அறிவீரோ?" என்றும் வினவினார்.
.
.
.
கடைசியில், "இன்று திதி யாது?" என்று வினவினார்.
அது வரை,
கண்டும்
கேட்டும்
பேசியும்
இராத பித்தன்
கண்டான்.
கேட்டான்.
'முழுமதியோன்றே! முழுமதியோன்றே! முழுமதியோன்றே!' என்று பேசினான்.
'இருட்டில் நிலவினைக் கண்டீரோ. பித்தன் தாம் போலும். முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக' என்று நகைத்து மன்னன் நகர்ந்தான்.
அது வரை,
கண்டும்
கேட்டும்
பேசியும்
இராத பித்தனுக்கு,
கண்டதும்
கேட்டதும்
பேசியதும்
பொய் எனத் தோன்றவில்லை. வாள் கையில் ஏந்தி, அன்னை முன் சென்று
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
என இடையறாது மனதிற் துதித்தான்.
துதியினூடே பித்தம் சித்தத்திலேறி பாட்டு பலவும் படித்தான்.
பாட்டினூடே பரசக்தியவள் அவன் முன்னே தோன்றினாள்.
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு செய்வீராக"
என்று சொன்னவன்,
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
எனக் கூவினான்.
அதன் பின்னர் அவன் பிதற்றிய பாடலைப் புகழ்ந்தனர் பலர்.
அவன் பாடிய அன்னையைப் புகழ்ந்தனர் பலர்.
அவனை ஏசிய மன்னனை ஏசினர் சிலர்.
நிலவு வந்ததா? அம்மாவாசை இரவு பௌர்ணமி ஆனதா? பித்தன் கூற்றை பராசக்தி பலிக்கக் செய்தாளா?
பராசக்தியைக் கண்ட பின் பித்தனுக்கே அதில் அக்கறை இல்லை.
நமக்கேன்?