Monday, March 25, 2013

பாட்டின் புகழ்


வையத்து மாந்தர்காள் கேளீர்
வையத்தில் உண்டு வாழ வைக்கும் அமுதமொன்று!

சிந்தைதனை மத்தாக்கி ஆசைக் கடலிடை
சித்தமதை அரவமாய்க் கட்டி
இன்பமோர் புறம் துன்பமோர் புறம் பற்றி
பற்றற்ற அகத்தினிலே பரமனையிருத்தி

பல காலம் இழுத்தோர் வேள்வி செய்தால்...

விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!
மிடிமையும் அச்சமும் சோர்வும் கவலையும் கலந்த
விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!

அதனை

அப்படியே அருந்தி அகத்திலே இருத்தி
அமைதியாய் பொருத்தி அசையாது கொண்டால்

அமுதம் தோன்றும்! ஆம்! ஆம்!
அமுதம் தோன்றுமே! ஆகா!
அது நித்தம் தோன்றுமே!
இங்கும் அங்கும் தோன்றுமே!
அமுதம்
இன்றும் என்றும் தோன்றுமே!

அமுதத் தமிழ் கவிதையது ஆசைக் கடல் அடியிருந்து
அழகாய் அறிவாய் இசையாய் சொல்லாய் பொருளாய்
கருத்தென்னும் கலசத்திலே காதலென்னும் கன்னியவள் ஏந்தி வர

அமுதமது  தோன்றுமே!
பாட்டென்னும் அமுதமது தோன்றுமே!
நாம் பழுதின்றி பருகிடப பல்சுவைப்
பாட்டென்னும் அமுதமது

அரியவன் அன்னையாய் அன்னையே அப்பனாய்
அழகென்னும் மோகினியாய் நமக்கு மட்டுமே
பகிர்ந்துப் பருகிடத் தர
பராசக்தியவளைக் கண்டப் பரவசமாய்
பாட்டெனும் அமுதமது பழுதின்றித் தோன்றுமே!

அதனைப் பருகி பருகி
பரவசமாகி
சொல்லிழந்து
பொருளிழந்து
அறிவிழ ந்து
கருத்திழந்து
சித்தமிழந்து
தன்னையே தானிழந்து
கண் திறந்து பார்த்தால் எல்லாம்

ரசம்! ரசம்! ரசம்!

No comments: