Saturday, January 10, 2015

கிளிப் பாட்டு

காலைச் சூரியன் கண்டே 
    நான் கிடந்தேன் காளியின் களியில்
சோலைக் கிளிகள் வந்தே 
    கவி பாடின வெட்ட வெளியில் 

கூடிய கிளிகளில் ஒன்று 
    என் மானிட வடிவைக் கண்டு 
நாடியே என்னிடம் வந்து 
    பாடியதே தமிழ்ச் சிந்து 

கிளிப் பாட்டு:

கேளாய் மானிடப் பதரே 
    உனக்குபதேசம் செய்திட வந்தேன் 
சொல்லினில் தமிழைச் சேர்த்து 
    நான் சொல்லுவதெல்லாம் தேன்! தேன்!

ஓமெனும் மந்திரம் போலே
    உனக்கோர் மந்திரம் சொல்லிட வந்தேன்
பூமியில் எதையும் கண்டால் 
    நீ கேட்டிடுவாய் இது ஏன்? ஏன்?

கவலை என்றும் இல்லை 
    நாம் காற்றில் பறக்கும் சாதி 
காற்றில் பறந்து கொண்டே 
    கதிரினில் கலக்கும் சோதி

சோம்பல் என்றும் பகையாம் 
    அதை வினையால் சுட்டிட முடியும் 
சாம்பல் பூசும் சிவனின் 
    சகியால் காயும் கனியும்

சாத்திரம் எல்லாம் தேடு 
    அதில் பொய்மை எல்லாம் சாடு 
ஆத்திரம் அதனைப் போற்று 
    ஆனால் அதையும் ஆறப் போடு 

காதல் வீரம் மானம் 
    மூன்றும் நமக்கு உயிராம்
சாதல் இல்லா சக்தி அவளின்
    புகழே நமக்குப் பயிராம்

கிக்கீ எனுமோர் கூட்டம் 
    இன்னும் குக்கூ எனுமோர் கூட்டம் 
கிக்கீ குக்கூ எல்லாம் 
    இங்கு சக்தி அவளின் ஆட்டம்

கூட்டம் கூட்டி இங்கே 
    செய்திடுவார் சிலர் பூசல்
வாட்டம் வஞ்சனை வளர்த்துப் 
    பின் மாய்ந்திடும் அவரோர் ஈசல்

சாதல் ஒன்றே திண்ணம் 
    எனும் உண்மை நாம் அறிந்தோமே
காதல் கவிதை கொண்டே 
    சாவையும் அறுத்தெரிந்தோமே

பாடு பாடு பாடு
    தமிழ் இருப்பது பாடத் தானே
பாடு உனக்கிங்கேது 
    உனக்கென பொழியுது வானே 

ஓம் ஓம் சக்தி என்றே 
    நீ நித்தம் சொல்லிடுவாயே 
ஓம் ஓம் சக்தி என்றால் 
    நீ முற்றும் உணர்ந்திடுவாயே


சொல்லிய கிளியும் சென்று 
    சேர்ந்தது சித்பர வெளியில் 
சொல்லிய பாட்டைக் கேட்டு 
    நான் மரித்தேன் காளியின் களியில்

ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    இனி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    என ஓயாது உரைத்திடுவோம் ஓம் 


No comments: