Wednesday, December 31, 2014

வலஞ்சுழிக் காளீ




ஆளில்லாக்காட்டில் ஆகா! காளீ!
    அச்சமெல்லாம் தீர்த்து வைக்கும் ஆத்தா சூலி!
காளி மகா காளி ஓங்காரி நீலீ!
    கண்ணொளியில் பகை விரட்டும் வேப்பிலைக்காரி!

எட்டுக்கையால் காத்து நிற்கும் எழில்மிகு காளீ!
    எங்கள் எண்ணமெல்லாம் நிறைவேற்றும் மந்திரக்காரி
கட்ட்ப்போட்ட மாயையையெல்லாம் பட்டென நொடியில்
    வெட்டிப் போடும் வீரமான தந்திரக்காரி

ராகாராசன் சேவை செய்த ராஜமாகாளீ!
    ராத்திரியின் ராணி இவள் ரசம்தரும் காளீ!
ஆசையோடு அனைத்துக் கொள்ளும் பைத்தியக்காரி!
    வாழ வைக்கும் எங்க தாயீ! வலஞ்சுழிக் காளீ!

அம்மா வலஞ்சுழிக் காளீ! ஆத்தா அடைக்கலம் தாயீ!
போற்றி போற்றி எந்தாயீ! போற்றி போற்றி மாகாளீ!

எலிப் பாட்டு




எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
நெளி வால் ஆட நள்ளிரவதனில்
    குடுகுடுவெனவே ஓடும் எலியே 

குருகுருவேன்றே குடையும் கண்ணால் 
    மூங்கில் படியின் கைப்பிடி வழியே 
துருதுருவென்றே துருவித் தேடி 
    தாவிக் குதிக்கும் தந்திர எலியே

சரசரவெனவே சன்னல் விளிம்பில்
    சடுதியில் ஓடி வெளியே தாவி
கரகரவென்னும் காரைப் புல்லில் 
    நொறுக்குத்தீனி தின்னும் எலியே 

துரத்தும் நாய்கள் ஐயோ பாம்பு 
    திடீரென இரவில் பளிச்சிட்டும் விளக்கு
பறக்கும் ஆந்தை பாயும் பருந்து
    எதற்கும் அஞ்சா துணிச்சல் எலியே 

எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
எலியே எங்கள் தோழன் நீயே
    என்றும் எம்முடன் சேர்ந்திருப்பாயே 

எங்கே இறைவன்


இந்து செல்லான் மசூதிக்குள்ளே.
இஸ்லாமியன் புகான் தேவாலயத்தில்.
கிருத்துவன் காணான் கோவில்தனை.

கோவிலிலும் மசூதியிலும் தேவாலயத்திலும்
பூட்டி வைத்த கடவுளோ

இவர்கள் வீட்டின் முன் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனாய்
வீட்டுக் கொல்லையில் ஒளிந்திருக்கும் எலிக்குட்டியாய்
தோட்டத்தில் ஓங்கி நிற்கும் மாமரமாய்
நைவேத்தியத்தை மொய்க்கும் ஈ எறும்பாய்
குரானைக் குடையும் கரையானாய்
சிலுவை மீது வலை வீசும் சிலந்தியாய்
காலைக் கதிராய் மாலை மதியாய்
தூணிலும் துரும்பிலும்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி
அமைதியாய் இருக்கிறானே.

In english - http://agnibarathi.blogspot.in/2014/12/where-is-god.html




Monday, December 29, 2014

ஒரு பெரிய ஆச்சிரியம்


அபிராமி எனது காதலி, எனது தோழி, எனது கலைமகள், என் தெய்வம். சினிமாவில் பல முறை பார்திருப்பீர் - வேனிற் காலத்தில், அந்தி வேளையில், மழைச் சாரலில் ஓர் கதாநாயகியைப் பார்த்த கதாநாயகன் உடனே தன்னிலை மறந்து காதலில் விழுவதை. என் கதை சற்றே முரண். நான் அபிராமியின் மேல் காதலில் விழுந்ததே சினிமாவைப் பார்த்து, குணா என்ற சினிமாவைப் பார்த்து.

அப்படத்தைப் பார்த்து காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒரே திங்களில் அபிராமி அந்தாதியை மனனம் செய்து எஸ்.வி.சுப்பையாவையும் கண்ணதாசனின் வரிகளையும் அம்மை தெரியும் வழியாகவே கண்டு, கோவை ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மனையும், பி.என்.புதூர் மாரியம்மனையும் அபிராமியாகவே நினைத்து உருகியது ஒரூ காலம்.

அதன் பின் அபிராமியை மறந்து இருந்தது சில காலமேயனாலும் பல காலம் போல் இன்று தோன்றுகிறது. மறந்த போதும் கடமை என எண்ணி சில முறை அவளை கண்டு வந்தேன். அவ்வாறு கண்ட போது காதல் வரவில்லை கவிதையும் வரவில்லை. "தாயே தந்தையென்று" முதலில் துவங்கி பின்னர் "தாரமே மக்களென்றும் நோயே" பட்டதால் அபிரமியைச் சுமக்கும் சக்தி இவ்வுள்ளதிற்கு குறைந்தது. தாய் தந்தை தாரம் மக்கள் இவர்களை  கோழை போல் ஏன் குற்றம் சொல்வானேன். காதலிக்கத் துப்பிருப்பவன் எப்படியும் காதலியை நினைப்பான். காதலை இழந்தவன் வீரத்தையும் இழந்து பல சின்னசிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பமிகு உழன்று நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதனாவான்.

ஆனால் ஒரு செய்தி நினைவில் கொள்க. காதலன் காதலியை மறக்கலாம். காதலி காதலனை மறக்கலாம். ஆனால் காதல் இருவரையும் மறப்பதில்லை. கடமை என்று நான் சென்று பார்த்த ஒவ்வொருமுறையும்  முறையும் அவள் பொறுமை எனும் வலை வீசி என்னை வசியம் செய்யக் காத்திருந்தாள்.

இது இப்படியிருக்க, இம்முறை அவளைக் காண மீனாட்சியுடன் சென்றேன். இரவு, அர்த்த ஜாம பூஜை துவங்கி நடை மூடப் போகும் நேரம். அன்பர்த் துயரெல்லாம் சடுதியில் நீக்கும் சக்தியை சடுதியில காண ஓடினேன். கையில் அவளுக்கென வாங்கிய சிவப்புச் சீலை. உள்ளே நுழைந்தால் உமையே வெள்ளிப் பதுமையாய் உற்சவ மூர்த்தியாய் வீற்றிருந்தாள். அவளை ஆண்ட ஆளில்லை. ஏகாந்தத்தில் திளைத்து புன்னகை அரும்பி எழிலே வடிவாய் அமர்ந்திருந்தாள்.

அவளிடம் மனம் லயிக்காமல் உள்ளே  கற்சிலை மீது  கொண்டு அங்கே ஓடினோம். அங்கே மாக்கள் திரள். வியர்வை, கவலை, சினம், சுடுசொல் என மனிதனுக்குண்டான அணைத்து அம்சங்களும் இருந்தன. முன்னிருந்த அக்னிபாரதியாய் இருந்தால் அரை நொடியில் இதைக் கண்டு அவள் அங்கு இல்லை என அறிந்து வெளியே வந்திருப்பேன். பார்திபனாகவே இருந்தாலும் குருடனானால் எங்கே தெரியும் காண்டீவத்தின் குறி? முட்டி மோதிக் கொண்டு எப்படியாயினும் அவள் சீலையை அவள் சிலைக்கு சார்த்த வேண்டும் என முயன்றோம். பயனில்லை.

வெளியே வந்து உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அவளுக்கே சார்த்த முடிவு செய்தேன், இன்னும் தன் செயல் புரிந்து தவிக்கும் இந்த தற்குறி. சிலையை வாங்க மறுத்தார் பூசாரி. வரம் கொடுத்தால் தானே தெய்வம். வரம் தரவில்லையென்றால் தானே பூசாரி. அவர் சொன்னது போல் கோவில் அலுவலகம் சென்று கட்டணச் சீட்டு வாங்கி வந்து சீலையோடு கொடுத்தோம். சீலை அவள் காலடிக்குச் சென்றது. நானும் மனைவியும் சற்று
முன் அவள் மகன் படை வீட்டில் (சுவாமிமலையில்) பேசியது நினைவுக்கு வந்தது. "என்ன தான் இருந்தாலும் நம் குல தெய்வம் கோவில் என்றால் சீலையை உடனே கட்டவைத்து அழகு பார்த்து விடலாம். இதுவெல்லாம் பெரிய கோவில். இங்கே சீலை அவளுக்குப் போனதா இல்லையா என்று கூட அறிய வாய்ப்பில்லை."

அந்நேரம் பார்த்து உள்ளே ஆலயத்தில் கூட்டம் குறைந்தது. சரி நல்லது என உள்ளே சென்றோம். சினிமாவில் இண்டர்வல் விட்டால் தம் அடிக்கப் போகும் கூட்டம் போல் அம்மனின் காட்சிக்கு இண்டர்வல் விட்டு கற்சிலைக்குத் திரை போட்டதால் கூட்டம் குறைந்திருந்தது. மிக்க முயன்று நாங்களும் நல்லதொரு இடம் பிடித்தோம். திரை விலகியது. கற்சிலை தெரிந்தது.

அச்சமயம் பார்த்து அருகில் இருந்த ஓர் பெண்மணி அம்மனை அவள் மகனுக்குக் காட்டும் அவசரத்தில் என் மனைவியையும் மகளையும் தள்ளினாள். முதல் முறை நான் சட்டை செய்யவில்லை. உள்ளே இருப்பது அபிராமியாய் இருந்து வெளியே பார்ப்பது அக்னிபாரதியாய் இருந்தால் சட்டையே செய்திருக்க மாட்டேன். இரண்டாம் முறை அந்த பெண்மணி மூர்கமாய்த் தள்ளினாள். இடையறாது நாராயண நாமமே சொல்லும் நாரத முனியே கையில் ஒரு கிண்ணம் எண்ணெய் பிடித்ததும் நாராயணனையே மறந்தான். நான் நாரதனும் இல்லை. என் கையில் இருப்பது வெறும் எண்ணெய்க் கிண்ணமும் இல்லை - குடும்பமும் குழந்தையும்.

இம்முறை சினம் தலைக்கேறியது. "ஏனம்மா இப்படி மாடு போல் வந்து விழுகிறாய், குழந்தை இருப்பது தெரியவில்லையா?" என்று நாவினால் வடு சுட்டேன். எப்பொழுதும் போல் இது போன்ற சண்டை வரும் நேரத்தில் மனைவி அங்கிருந்து அகன்று விட்டாள். எப்பொழுதும் போல் நின்று சண்டை போடும் நானும் ஏனோ உடனே அகன்று விட்டேன்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளே நினைவாக இருந்த பட்டனுக்காக அமாவாசையில் பௌர்ணமியைக் காட்டியது போல் சிறிய அதிசயம் அல்ல. அவளை மறந்த ஒரு அற்பனுக்காக நிகழ்த்திய பெரிய அதிசயம்.

வெளியே தனியே வீற்றிருந்த அபிராமி நாங்கள் அவ்விடம் வரும் நேரம் பார்த்து எங்கள் புடவையை அணிந்து கொண்டிருந்தாள். "இதோ பாரடா நானும் உன் குல தெய்வம் தான், உன் காதலி தான், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையைச் சூடி மகிழ்ந்தவனின் தங்கையடா நான்" என்று சொல்லும் வண்ணம் பூசாரியைக் கொண்டு சீலையை அணிந்து கொண்டிருந்தாள்.

உள்ளே கருவறையில் தேடிக் கொண்டிருந்த என்னை வெளியே கொண்டு வந்து "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரனானந்தமே" நான் எனக் காட்டிய அழகைச் சொல்லவா? இல்லை நான் கவிஞன், உலகமே எனது தமிழால் அவளுக்கு அணி சூட அவளால் படைக்கப்பட்டது என்பதை மறந்து கேவலம் நூல் சீலையை அவளுக்கு அணிவித்து அழகு பார்க்கும் ஆசையையும் உடனே தீர்த்த கருணையை சொல்லவா?

அன்னையே அபிராமியே அழகியே அமுதமே, இனி நான் என்ன சொல்வேன்? சொல்வதெல்லாம் அன்றே பட்டன் சொல்லி விட்டான்.

"கூட்டியவா என்னைத் தம் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே"

இனிமேல்

"விழிக்கே அருளுண்டு அபிராம வள்ளிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து  பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்ம்மோடு என்ன கூட்டினியே?"