Monday, March 30, 2015

கோடைப் பாட்டு

வாராய் கோடையின் வெயிலே - வந்து
தீராய் எங்கள் துயரே
வாடைக் குளிரின் பகையே - நீ
தாராய் உந்தன் நகையே

கூதிர் குளிரில் நடுங்கி - எங்கள்
குரம்பை ஓய்ந்ததொடுங்கி
பாதி உயிராய் தேய்ந்தோம் - சோம்பற்
நோயிற் உழன்று மாய்ந்தோம்

நீரின் தாகம் மறந்தோம் - நீடு
நிழலின் அறுமை மறந்தோம்
காரின் கருணை மறந்தோம்
வாழ்வின் குறியை இழந்தோம்

சோதிக் கனலே வருக - எங்கள்
நாடி நரம்பும் உருக
உறைந்த உதிரம் உயிர்க்க - எம்
மேனியெல்லாம் வியர்க்க

நீ

வருவாய் கோடைத் தீயே வந்
தெரிப்பாய் எங்கள் நோயே
தருவாய் வேள்வித் தீயே - அதில்
இடுவாய் உயிரின் நெய்யே

பழைமை மடமை கொன்று - சோம்பற்
பகையை வீழ்த்தி வென்று
உழைப்பை உயிரில் நடுவாய் வீண்
உறக்கம் உடலில் கெடுப்பாய்

வெப்பம் வியர்வை வெயில் - இவை 
யாவும் வினையின் குறியாம் 
வினையில் இயைந்த உயிர்க்கு நீ 
உணர்வாய் உரமாய் வருவாய் 

அன்னை சக்தியின் தீயே - உலகை 
உழன்றிடச் செய்யும் நோயே 
உழைப்பிற்க்கெல்லாம் தாயே 
எம்மை பாடிடப் பணித்திடுவாயே 

No comments: