Thursday, January 24, 2013

திண்ணம்



அன்றொரு நாள் இளமைத் தீயில்
சுட்டெரித்தேன் பற்பல வாச மலர்களை

மல்லிகைக் காதல்
செம்பருத்தி மோகம்
தாமரை அறிவு

இன்று வயது கூடுகிறது
எழுத்தாணி முனையில்
பழஞ் சாத்திரத்தின் பனையோலைகள்
எரிந்து சாம்பலாகின்றன

எது எப்படியோ
எரித்தல் திண்ணம்
எரிவதும் திண்ணம்

In English - http://agnibarathi.blogspot.in/2013/01/destiny.html


Saturday, January 05, 2013

வரம் தாரும்


பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

இறப்பும் இனிமையே நீர் படைத்த உலகில்
சிறப்பும் செல்வமும் சுடர் தரும் கதிரும்
துறவும் துயிலும் துன்பமும் துயரும்
பரவும் நின் படைப்பில் மீண்டும் (பிறக்கும் வரம்...)

நெல் நட்டு நல்லரிசி பயிர் செய்யும் உழவனாய்
சொல் நட்டு சுடரோடு விளையாடும் புலவனாய்
தொல்  கடலில் துணிந்தோடி திரிவியம் தேடு வணிகனாய்
அல்லலும் அமைதியும் அமுதென பலவாறு அள்ளிக் குடிக்க (பிறக்கும் வரம்...)

முக்தியொன்றும் தேவையில்லை முக்தியொன்றும் தேவையில்லை
சித்ததிற்கொர் விருந்தாம் சாகா மருந்தாம் வாழ்விதனில் பரா
சக்தியவளும் தேவையில்லை செந்தமிழ்ப் பாட்டதனின்
தித்திப்பே போதும் பாடல் செய் புலவன் பெயர் தேவையில்லை

எனவே

பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்