Tuesday, November 20, 2012

மணம்


இரவென்னும் மங்கைக்கோர் வாசமுண்டு - அவள்
கரம்பற்றி கட்டியிழுத்து முகர்ந்து பார்த்தால்
தெரியும் அது மௌனமென்று

In English

புட்ட கவி


நீர் ஒன்றும் பெரிய கவியல்ல குவெம்பு அவரே
சீர் துங்கை நதியோட சிட்டுக் குருவி விளையாட
கார் மேகம் கானகத்தே கதை பேசி களியாடும்
குப்பள்ளி தனில் பிறந்தால்
நான் கூட நயமாய்த் தான் கவி படைப்பேன்.


Monday, October 29, 2012

மூன்று அக ஹைக்கூகள்


திணை - முல்லை

துறை - பிரிவின்கண் வருந்தி அது குறித்து மறைவாக தலைவி தலைவனுக்கு கூறியது

காத்திருப்பேன் காலமுண்டு
இவ்வந்தியில் துணைவர் மூன்று
கார்மேகம் கருமுல்லை கொஞ்சம் தனிமை

திணை - குறிஞ்சி

துறை - புணர்தல் வேண்டி பலமுறை நாடிய தலைவனிடம் தலைவியின் பதிலை தோழி கூறியது

கார்மேகம் தழுவும் கொல்லிமலை தனிலே
காரிருள் பொழியும் குளிரருவி அருகே
குறிஞ்சிப் பூ பறிக்கக் சென்றாள்

திணை - பாலை

துறை - பணி முடிந்து மனை திரும்பும் தலைவன் வழியின் இயல்பு கண்டு வருந்தி தலைவிக்கு அனுப்பிய சிற்றோலை

மரமில்லா நெடுஞ்சாலை
மனமெல்லாம் வெறும் சோலை
எரும்பான நான் பிழைத்தால் மனை சேர்வேன்

விளக்கம் இங்கே

Sunday, October 14, 2012

கறை

மஞ்சம் மீது மழையெனப் பொழிந்து
கொஞ்சும் இரவொடு கலவிகே கலந்த
நெஞ்சம் நெகிழ்ந்த நெடுவானத் துகில் மேல்
மஞ்சள் கறையாய் மருவினன் கதிரோன்

English

Sunday, October 07, 2012

இராவண மகாத்மியம்


நோக்கின் எத்துனை அழகிந்த இராவணன்
ஆர்க்கும் அலைகடல் சுழிலங்கையின் காவலன்

பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
தண்மேகமெனத் தான் கருத்த முகம் மீது
பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்

மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை மேல் உருண்டோடும்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை ஈரிமயம் காண்

பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்
இரும்பெனும் நெஞ்சில் ஈராயிரம் எண்ணமாய் வண்ணமாய்
அருமைப் பொன் மகுடத்தால் அருநீர் பருகும் மேகத்திற்கு நீர் தரப்
பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்

பச்சைப் பட்டுடை போர்த்திய இடை என்ன வளமோ
இச்சையோடு அசைந்தாடும் இளநெல்லைப் போலே
இச்சையோடிவன் கருமுகம் பொழியும் எழில் மழையருந்தி
இச்சையோடு அசைந்தாடும் இடை என்ன வளமோ

வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்
துள்ளியோடும் நதியாய் தாவி எங்கும் இடை தனிலே
அள்ளித் தெளித்த நெல்லாய் ஆழகுப் பட்டாடை தனை
வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்

உண்மையுரைப்போம் வெரூ*உம் மானிடன் அல்ல இவன்
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்
பண்டிதர் படிக்கும் புருஷசுக்தம் அதனின்று வந்த
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்

சொல்லும் இவ்வுலகில் சுடர் தரும் சூரியன் இவன்
புல்லும் பனிமலையும் ஒருங்கே போற்றும் புரவலனிவன்
வல்லுயிர் உலகே வடிவான இவன் எதிர் வெறும்
வில்லுடை வேடுவன் தான் இந்த இராமன்

* - Must be the elongated form of வல்லின று. But Google transliterate does not recognize it for some reason. பொறுத்தருள்க.

In English

Sunday, September 30, 2012

இறைவன் எனக்கோர் ஈசல்


I shall die again and again to know that life is inexhaustible. - Stray flowers, Tagore.

இறைவன் எனக்கோர் ஈசல்.
எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்
எனக்கு,

ஒரு நொடி பிறந்து
ஒளியிடம் பறந்து
மறு நொடி இறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.


எல்லாம் வல்ல இறைவன்
என் தலையில்

ஒரு நொடி பிறந்து
பாட்டாய் மலர்ந்து
மறு நொடி மறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்

மீண்டும் மிண்டும்
ஒரு நொடி பிறந்து
ஒரு நொடி படர்ந்து
மறு நொடி இறந்து
பிறப்பைக் கடந்து
இறப்பை உணர்ந்து
ஒளியைக் கலந்த

ஈசல்.


எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.


இறைவன் எனக்கோர் ஈசல்.