Wednesday, December 27, 2006

இறைவன் நான்


தவழும் தென்றலடா நான்
தரணி எங்கும் வாசமாகும்

நடக்கும் நதியடா நான்
நிலம் எல்லாம் என்னால் வளம்

காலைக் கதிரடா நான்
கண் விழித்தால் உலகுவிடியும்

சிரிக்கும் நிலவடா நான்
சிந்தையும் குளிர்ந்துவிடும் என்னொளியில்

தெரிக்கும் மழையடா நான்
தொட்ட இடமெல்லாம் தூய்மையாம்

மகிழும் மலரடா நான்
மலர்ந்தால் அணைத்தும் ஒளி

பரந்த விண்ணடா நான்
விரிந்தால் வையம் அடங்கும்

எரியும் நெருப்படா நான்
வீறு கொண்டால் எல்லாம் அழியும்

பாயும் புலியடா நான்
குரல் கொடுத்தால் குலை நடுங்கும்

சீறும் பாம்படா நான்
சினம் கொண்டால் படை நடங்கும்

பெருகும் வெள்ளமடா நான்
செறுக்கடைந்தால் தடையெல்லாம் தூள்

சுழலும் புயலடா நான்
துணிவு கொண்டால் உலகம் அஞ்சும்

நிறையும் இறையடா நான்
விளையாடினால் பிரபஞ்சம்

Monday, December 18, 2006

சக்தி பாட்டு

இன்புற்று இருப்பது வாழ்வு - அதில்
துன்பம் என்பதோர் பொய்யே
அன்புற்று இருப்பது இயல்பு
பண்பு இயல்பின் திறனே

ஆசை என்பதோர் பூசை - பேர்
ஆசை அதனிற் பீடை
ஓசை அனைத்தும் இசையே
பாஷை நமக்குக் கவியே

எண்ணம் என்பது எரியே - அதில்
பின்னம் நேர்வது பழுதே
திண்ணமாவது கருத்தே
சின்னமதற்கு நம் வி
னையே

காதல் நமக்கின்னுயிரே - வருந்தி
நோதல் நமக்கொரு நோயே
வேதம் என்பது அறிவே
சாதல் அதனாற் பொய்யாம்

சக்தி அவள் நம் துணிவே - பிரிந்து
புத்தி செய்வது பிழையே
சித்தி அவள் தரும் வரமே
சக்தி என்பது மெய்யே

Friday, December 15, 2006

சக்தி வருவாயே

நிலவாடும் இரவினிலே நதியோடும் கரையினிலே
கலவியிலே கலந்தாடி களியினிலே கவிபாடி
பலகாலம் பலபொழுது பாட்டினிலே பசிமறந்திருக்க
சிலநேரம் என்னோடு சிவசக்தி நீ வருவாயே

காதலிலே கருத்திணைந்து கையோடு கை சேர்த்து
நாதமெனும் தேவி நீ நான் எனும் நிலை எய்தி
போதமெல்லாம் போக்கி பொருளெல்லாம் பெற்று
காதலென காதலென கலந்திருக்க காளி நீ வருவாயே

ஆவியிலே தவம் இருத்தி மோகமென்னும் தீ வளர்த்து
தேவிநீ தேகமெல்லாம் யாகம் செய்து உள்ளமெங்கும்
மேவியோர் நினைவின்றி மதியின்றி மனமின்றி
தேவியவள் சக்தியென சக்தியென காதலென நீ வருவாயே