Thursday, October 26, 2006

தீ உண்டு

தீயொன்று உண்டே
வேனில் மலரின் உள்ளிருந்து சிரிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காய்ந்த சருகெடுத்து உயிருடன் உண்ணும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
ஆலயத்திருந்து அமைதியில் அமரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அடுப்பினில் துவண்டு உழைப்பினில் உருகும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காரணமொன்று இன்றி கானகம் கொல்லும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அன்னமோராயிரம் உயிர்க்கிட்டு அகிலமளிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காதலில் கனிந்து கண்ணில் ஒளிரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
கண்ணில் தோன்றி காமத்தில் எரியும்
தீயொன்று உண்டே

முடிவில்,

தீயென்று ஒன்று இங்கு உண்டே.

2 comments:

Anonymous said...

தமிழ்ப்பதிவுகள் தொடங்கிய சூட்டினில் (sorry I couldn't resist that) ஒரு நற்கவிதை. உங்கள் கவிதை நாயகனைப்போல உங்கள் பேனாவுக்கும் பல ரூபங்கள்.

சருகில் மீதமிருந்த உயிர் சிலருக்கே தெரிகிறது.வேனில் மலரில் தணல் விநோதமான உவமானம். இரண்டையும் ஒரே வாக்கியத்தில் சொல்லத் தயங்குபவனாகத்தான் இருக்கிறேன் (கவிதைக்குப் பின்னும்)

தாளம் சற்றே தவறினாலும் எனக்குப் பிடித்த வரி
//காரணமொன்று இன்றி கானகம் கொல்லும //

பொந்தினில் வைத்தவந்தான் காரணி :-) அவன் அதற்குள் விரலை வைத்து இன்பம் காண்பவன். அவனை குற்றம் சாட்ட முடியாது. அவன் கவிஞன். நீங்களும்.

வாழ்த்துக்கள்

Agnibarathi said...

@பார்வதி - தமிழ் பதிவு கேட்டு விட்டு இப்படியா ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவது? :P கருத்துக்கு மிக்க நன்றி. பதிவுலகை விட்டு விலகினாலும், இவ்விடம் அடிக்கடி வருவீர் என நம்புகிறேன்!

@MSP - கவிதையை இத்துணை கவனத்துடன் ரசிக்க முடியும் என்று நம்ப முடியவில்லை. வேனில் மலரின் உவமானம் புதிதல்ல - 'சோலை மலரொளியோ நினது சுந்தர புன்னகை தான்' என்று நம் கவி ஏற்கனவே பாடி விட்டான்! :-) கவிஞன் என்ற வாழ்த்திற்கு தலை வணங்குகிறேன் - அதை விட சிறந்த்ததொறு வாழ்த்து தேவையில்லை. மிக்க நன்றி