Thursday, December 29, 2011

வெற்றி மந்திரம்

ஓம்!


அறிவென்பது முதலே அதுவிருந்தால்
அணுவும் அண்டம்
இன்றேல்
அண்டமும் அமைதி

எனில்,

முதலில்,

அறிவது அறிக! அறிந்தபின்
அறிந்தவற்றில் தெளிவது தெளிக

தெளிந்தபின் தெளிந்தவற்றில்
குறிப்பது குறிக

குறித்தப் பின் குறித்தவற்றில்
குறையின்றி அனைத்தும் துணிக

துணிந்தபின் துணிந்தவற்றில்
முடிவது முடிக

முடிந்தபின் முடிந்தது மிஞ்சியது
எல்லாமே ஒளி

ஒளியினில் ஒன்றி
அனைத்தும் அழித்து
இருட்டில் இறந்து
இறப்பில் துயின்று
துயிலில் எழுந்து

தீறா இருளில்
தீயாய்த் தோன்றி
தாயானவளை நினைந்து

மீண்டும்...

அறிவது அறிக!

Sunday, August 28, 2011

மரணம்

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்.
பெரிதாய் துக்கம் ஒன்றுமில்லை.
முதிர்ந்த கனி, மரத்தை விட்டது.
சற்றே சிந்தித்தால்...

பெட்டியில் பிணமாய்க் கிடப்பது பாட்டியல்ல
வெறும் பிணம்.

பிணத்தை விடுக.
சுற்றும் மக்கள்.

பாட்டியின் மக்கள்,
மக்களின் மக்கள்,
யார் யாரோ பெற்ற மக்கள்.

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்
பக்கத்தில்

பேசிக் கொண்டு சிலர்
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்
சிரித்துக் கொண்டு சிலர்
அழுது கொண்டு பலர்

போன தீபாவளிப் புடவை பற்றி
பேசிக் கொண்டு சிலர்

இந்தத் தீபாவளி புதுப் படத்தைப் பற்றி
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்

நக்கல் நையாண்டி கருத்து மாற்றியபடி
சிரித்துக் கொண்டு சிலர்

'பொண்ணு மாட்டுப் பொண்ணு எல்லாம்
தலையை விரிச்கிகொங்கோ'
என்று ஐயர் சொன்னவுடன்
அழுது கொண்டு பலர்

நீட்டிய கால் தொட பெண்களுக்குள் போட்டி
கையில் காசு கொடுத்துத் தேய்தேடுக்க ஆண்களுக்குள் போட்டி
நெய்பந்தம் பிடிக்க பேரன்களுக்குள் போட்டி

நேற்று வரை
'பாட்டிய கூட்டிண்டு போங்கோ'
என்று சொன்ன மருமகள்
இன்று 'காட்டுக்கு எடுத்துண்டு போங்கோ' என்கிறாள்.
சொல்லி விட்டுக் வராத கண்ணீர் வரவழைத்து அழுகிறாள்.

சொல்லில் உள்ள தெளிவு, செயலில் இல்லையே அம்மா!

காட்டிற்குப் போகிறோம்.
சட்டி உடைத்து சடங்கு செய்து
சாத்திரம் சாவின் உண்மை தெளிய வைக்கிறது.
உண்மையை வார்த்தையில் புதைத்து
விக்கி விக்கி அழுகிறார்கள்.

மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்

மேலே சுவற்றில், சித்திரத்தில்,
மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்
சுற்றிலும் கீதை -
'உடம்புக்கு சட்டை, உயிர்க்கு உடம்பு'
என்று உன்னதம் உரைத்த கீதை.

கீழே, கணினியின் கருணையில்
பாட்டிக்கு வைகுண்டம் தருகிறான் அக்னிதேவன்.

எல்லோரும் அழுகிறார்கள்
சிவனைப் பார்த்து, அரியையும் பார்த்து
கீதை படித்து, போதித்து
தினமும் வேதாந்தம் பழகி
யாகம் செய்து விரதம் நோற்று
வைராக்கியம் வளர்க்கும்
பிராமணர்கள் எல்லாம்
அழுகிறார்கள்.

வீட்டுக்கு வருகிறோம்.

தண்ணீர்க் குளியல்
பொங்கல் ஆகாரம்
கண்ணீர் எங்கே போயிற்று ஐயா?

சிரிப்பு, வம்பு, சண்டை

சாப்பாட்டில் உப்பு,
உடம்பில் சர்க்கரை,
கடையில் சேலை
எது குறைவு எது உசத்தி என்று விவாதம்

சின்னப் பெண் பெரியவர்களிடம் பாட்டுப் பாடி
பாராட்டு வாங்குகிறாள், நாளை
பெண் பார்க்கும் சடங்கிற்கு ஒத்திகை பார்க்கிறாள்.

இரவு வருகிறது
விவாதம்.
அச்சிறிய வீட்டில்,
அப்பொழுது முளைத்த
ஐந்தாறு சிறிய அரசியல் கட்சிகளுக்குள்
நாளை சடங்கு குறித்து விவாதம்.

சோற்று விவாதம்.
சாத்திரம் எல்லாம்,
சோற்றில் துவங்கி
சோற்றில் அடங்குகிறது.

ஓரத்தில் விளக்கு
மெதுவாய் எரிந்து கொண்டிருக்கிறது.
பாட்டி பிணமாய்க் கிடந்த இடத்தில்
ஓரத்தில் விளக்கு
மெதுவாய் இறந்து கொண்டிருக்கிறது.

ஒரு கேள்வி
செத்தது யார்?
பாட்டியா?
சாத்திரமா?
மனசாட்சியா?