Thursday, January 15, 2015

போகிப் பாடல்

புகையெனப் போன்மின் பழைமைகாள்
    தீயிற்ப் பட்டழிந்து போன்மின்
பகை நீர் எமக்கே பரிதிமுன் பனியே
    போல் பற்றழிந்து போன்மின்
வகை வகையே வாழ்வு புதுமை செய்வோம்
    படைப்பு செய்வோம் காண்மின்

அரைக் கணமும் நினையோம் உம்மை
    அடியோடு மறைந்து போன்மின்
நிறை நிலவு எந்தன் சிந்தை
    நித்தம் நவமெனச் சுடர் செய்வோம்
மறை செய்வோம் மனம் வளர்ப்போம்
    மதியினிலே தீ வளர்ப்போம் எனவே (புகையெனப்...)

விழியிரண்டில் கதிருண்டு காப்புண்டு
    வாயதனில் தமிழுண்டு கோலுண்டு
வழியதனைச் செம்மை செய்ய
    வாள் வீசும் காளியுண்டு
கலி தீர்த்தோம் களையறுத்தோம்
    களம் வென்றோம் புறம் காட்டி (புகையெனப்...)
 

Sunday, January 11, 2015

அவசரம்

அண்டம் ஆயிரம் சுழலச் செய்த அலகிலா ஆண்டவனுக்கு
அரளிப்பூவில் வண்ணம் தீட்ட அரை நொடி உளதே
அற்பச் செயலே என்றும் செய்யும் உனக்கும் எனக்கும்
அவசரம் அவசரம் அவசரம் ஏனோ?

In English - http://agnibarathi.blogspot.in/2015/01/haste.html

Saturday, January 10, 2015

கிளிப் பாட்டு

காலைச் சூரியன் கண்டே 
    நான் கிடந்தேன் காளியின் களியில்
சோலைக் கிளிகள் வந்தே 
    கவி பாடின வெட்ட வெளியில் 

கூடிய கிளிகளில் ஒன்று 
    என் மானிட வடிவைக் கண்டு 
நாடியே என்னிடம் வந்து 
    பாடியதே தமிழ்ச் சிந்து 

கிளிப் பாட்டு:

கேளாய் மானிடப் பதரே 
    உனக்குபதேசம் செய்திட வந்தேன் 
சொல்லினில் தமிழைச் சேர்த்து 
    நான் சொல்லுவதெல்லாம் தேன்! தேன்!

ஓமெனும் மந்திரம் போலே
    உனக்கோர் மந்திரம் சொல்லிட வந்தேன்
பூமியில் எதையும் கண்டால் 
    நீ கேட்டிடுவாய் இது ஏன்? ஏன்?

கவலை என்றும் இல்லை 
    நாம் காற்றில் பறக்கும் சாதி 
காற்றில் பறந்து கொண்டே 
    கதிரினில் கலக்கும் சோதி

சோம்பல் என்றும் பகையாம் 
    அதை வினையால் சுட்டிட முடியும் 
சாம்பல் பூசும் சிவனின் 
    சகியால் காயும் கனியும்

சாத்திரம் எல்லாம் தேடு 
    அதில் பொய்மை எல்லாம் சாடு 
ஆத்திரம் அதனைப் போற்று 
    ஆனால் அதையும் ஆறப் போடு 

காதல் வீரம் மானம் 
    மூன்றும் நமக்கு உயிராம்
சாதல் இல்லா சக்தி அவளின்
    புகழே நமக்குப் பயிராம்

கிக்கீ எனுமோர் கூட்டம் 
    இன்னும் குக்கூ எனுமோர் கூட்டம் 
கிக்கீ குக்கூ எல்லாம் 
    இங்கு சக்தி அவளின் ஆட்டம்

கூட்டம் கூட்டி இங்கே 
    செய்திடுவார் சிலர் பூசல்
வாட்டம் வஞ்சனை வளர்த்துப் 
    பின் மாய்ந்திடும் அவரோர் ஈசல்

சாதல் ஒன்றே திண்ணம் 
    எனும் உண்மை நாம் அறிந்தோமே
காதல் கவிதை கொண்டே 
    சாவையும் அறுத்தெரிந்தோமே

பாடு பாடு பாடு
    தமிழ் இருப்பது பாடத் தானே
பாடு உனக்கிங்கேது 
    உனக்கென பொழியுது வானே 

ஓம் ஓம் சக்தி என்றே 
    நீ நித்தம் சொல்லிடுவாயே 
ஓம் ஓம் சக்தி என்றால் 
    நீ முற்றும் உணர்ந்திடுவாயே


சொல்லிய கிளியும் சென்று 
    சேர்ந்தது சித்பர வெளியில் 
சொல்லிய பாட்டைக் கேட்டு 
    நான் மரித்தேன் காளியின் களியில்

ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    இனி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    என ஓயாது உரைத்திடுவோம் ஓம் 


Wednesday, December 31, 2014

வலஞ்சுழிக் காளீ




ஆளில்லாக்காட்டில் ஆகா! காளீ!
    அச்சமெல்லாம் தீர்த்து வைக்கும் ஆத்தா சூலி!
காளி மகா காளி ஓங்காரி நீலீ!
    கண்ணொளியில் பகை விரட்டும் வேப்பிலைக்காரி!

எட்டுக்கையால் காத்து நிற்கும் எழில்மிகு காளீ!
    எங்கள் எண்ணமெல்லாம் நிறைவேற்றும் மந்திரக்காரி
கட்ட்ப்போட்ட மாயையையெல்லாம் பட்டென நொடியில்
    வெட்டிப் போடும் வீரமான தந்திரக்காரி

ராகாராசன் சேவை செய்த ராஜமாகாளீ!
    ராத்திரியின் ராணி இவள் ரசம்தரும் காளீ!
ஆசையோடு அனைத்துக் கொள்ளும் பைத்தியக்காரி!
    வாழ வைக்கும் எங்க தாயீ! வலஞ்சுழிக் காளீ!

அம்மா வலஞ்சுழிக் காளீ! ஆத்தா அடைக்கலம் தாயீ!
போற்றி போற்றி எந்தாயீ! போற்றி போற்றி மாகாளீ!

எலிப் பாட்டு




எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
நெளி வால் ஆட நள்ளிரவதனில்
    குடுகுடுவெனவே ஓடும் எலியே 

குருகுருவேன்றே குடையும் கண்ணால் 
    மூங்கில் படியின் கைப்பிடி வழியே 
துருதுருவென்றே துருவித் தேடி 
    தாவிக் குதிக்கும் தந்திர எலியே

சரசரவெனவே சன்னல் விளிம்பில்
    சடுதியில் ஓடி வெளியே தாவி
கரகரவென்னும் காரைப் புல்லில் 
    நொறுக்குத்தீனி தின்னும் எலியே 

துரத்தும் நாய்கள் ஐயோ பாம்பு 
    திடீரென இரவில் பளிச்சிட்டும் விளக்கு
பறக்கும் ஆந்தை பாயும் பருந்து
    எதற்கும் அஞ்சா துணிச்சல் எலியே 

எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
எலியே எங்கள் தோழன் நீயே
    என்றும் எம்முடன் சேர்ந்திருப்பாயே 

எங்கே இறைவன்


இந்து செல்லான் மசூதிக்குள்ளே.
இஸ்லாமியன் புகான் தேவாலயத்தில்.
கிருத்துவன் காணான் கோவில்தனை.

கோவிலிலும் மசூதியிலும் தேவாலயத்திலும்
பூட்டி வைத்த கடவுளோ

இவர்கள் வீட்டின் முன் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனாய்
வீட்டுக் கொல்லையில் ஒளிந்திருக்கும் எலிக்குட்டியாய்
தோட்டத்தில் ஓங்கி நிற்கும் மாமரமாய்
நைவேத்தியத்தை மொய்க்கும் ஈ எறும்பாய்
குரானைக் குடையும் கரையானாய்
சிலுவை மீது வலை வீசும் சிலந்தியாய்
காலைக் கதிராய் மாலை மதியாய்
தூணிலும் துரும்பிலும்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி
அமைதியாய் இருக்கிறானே.

In english - http://agnibarathi.blogspot.in/2014/12/where-is-god.html




Monday, December 29, 2014

ஒரு பெரிய ஆச்சிரியம்


அபிராமி எனது காதலி, எனது தோழி, எனது கலைமகள், என் தெய்வம். சினிமாவில் பல முறை பார்திருப்பீர் - வேனிற் காலத்தில், அந்தி வேளையில், மழைச் சாரலில் ஓர் கதாநாயகியைப் பார்த்த கதாநாயகன் உடனே தன்னிலை மறந்து காதலில் விழுவதை. என் கதை சற்றே முரண். நான் அபிராமியின் மேல் காதலில் விழுந்ததே சினிமாவைப் பார்த்து, குணா என்ற சினிமாவைப் பார்த்து.

அப்படத்தைப் பார்த்து காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒரே திங்களில் அபிராமி அந்தாதியை மனனம் செய்து எஸ்.வி.சுப்பையாவையும் கண்ணதாசனின் வரிகளையும் அம்மை தெரியும் வழியாகவே கண்டு, கோவை ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மனையும், பி.என்.புதூர் மாரியம்மனையும் அபிராமியாகவே நினைத்து உருகியது ஒரூ காலம்.

அதன் பின் அபிராமியை மறந்து இருந்தது சில காலமேயனாலும் பல காலம் போல் இன்று தோன்றுகிறது. மறந்த போதும் கடமை என எண்ணி சில முறை அவளை கண்டு வந்தேன். அவ்வாறு கண்ட போது காதல் வரவில்லை கவிதையும் வரவில்லை. "தாயே தந்தையென்று" முதலில் துவங்கி பின்னர் "தாரமே மக்களென்றும் நோயே" பட்டதால் அபிரமியைச் சுமக்கும் சக்தி இவ்வுள்ளதிற்கு குறைந்தது. தாய் தந்தை தாரம் மக்கள் இவர்களை  கோழை போல் ஏன் குற்றம் சொல்வானேன். காதலிக்கத் துப்பிருப்பவன் எப்படியும் காதலியை நினைப்பான். காதலை இழந்தவன் வீரத்தையும் இழந்து பல சின்னசிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பமிகு உழன்று நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதனாவான்.

ஆனால் ஒரு செய்தி நினைவில் கொள்க. காதலன் காதலியை மறக்கலாம். காதலி காதலனை மறக்கலாம். ஆனால் காதல் இருவரையும் மறப்பதில்லை. கடமை என்று நான் சென்று பார்த்த ஒவ்வொருமுறையும்  முறையும் அவள் பொறுமை எனும் வலை வீசி என்னை வசியம் செய்யக் காத்திருந்தாள்.

இது இப்படியிருக்க, இம்முறை அவளைக் காண மீனாட்சியுடன் சென்றேன். இரவு, அர்த்த ஜாம பூஜை துவங்கி நடை மூடப் போகும் நேரம். அன்பர்த் துயரெல்லாம் சடுதியில் நீக்கும் சக்தியை சடுதியில காண ஓடினேன். கையில் அவளுக்கென வாங்கிய சிவப்புச் சீலை. உள்ளே நுழைந்தால் உமையே வெள்ளிப் பதுமையாய் உற்சவ மூர்த்தியாய் வீற்றிருந்தாள். அவளை ஆண்ட ஆளில்லை. ஏகாந்தத்தில் திளைத்து புன்னகை அரும்பி எழிலே வடிவாய் அமர்ந்திருந்தாள்.

அவளிடம் மனம் லயிக்காமல் உள்ளே  கற்சிலை மீது  கொண்டு அங்கே ஓடினோம். அங்கே மாக்கள் திரள். வியர்வை, கவலை, சினம், சுடுசொல் என மனிதனுக்குண்டான அணைத்து அம்சங்களும் இருந்தன. முன்னிருந்த அக்னிபாரதியாய் இருந்தால் அரை நொடியில் இதைக் கண்டு அவள் அங்கு இல்லை என அறிந்து வெளியே வந்திருப்பேன். பார்திபனாகவே இருந்தாலும் குருடனானால் எங்கே தெரியும் காண்டீவத்தின் குறி? முட்டி மோதிக் கொண்டு எப்படியாயினும் அவள் சீலையை அவள் சிலைக்கு சார்த்த வேண்டும் என முயன்றோம். பயனில்லை.

வெளியே வந்து உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அவளுக்கே சார்த்த முடிவு செய்தேன், இன்னும் தன் செயல் புரிந்து தவிக்கும் இந்த தற்குறி. சிலையை வாங்க மறுத்தார் பூசாரி. வரம் கொடுத்தால் தானே தெய்வம். வரம் தரவில்லையென்றால் தானே பூசாரி. அவர் சொன்னது போல் கோவில் அலுவலகம் சென்று கட்டணச் சீட்டு வாங்கி வந்து சீலையோடு கொடுத்தோம். சீலை அவள் காலடிக்குச் சென்றது. நானும் மனைவியும் சற்று
முன் அவள் மகன் படை வீட்டில் (சுவாமிமலையில்) பேசியது நினைவுக்கு வந்தது. "என்ன தான் இருந்தாலும் நம் குல தெய்வம் கோவில் என்றால் சீலையை உடனே கட்டவைத்து அழகு பார்த்து விடலாம். இதுவெல்லாம் பெரிய கோவில். இங்கே சீலை அவளுக்குப் போனதா இல்லையா என்று கூட அறிய வாய்ப்பில்லை."

அந்நேரம் பார்த்து உள்ளே ஆலயத்தில் கூட்டம் குறைந்தது. சரி நல்லது என உள்ளே சென்றோம். சினிமாவில் இண்டர்வல் விட்டால் தம் அடிக்கப் போகும் கூட்டம் போல் அம்மனின் காட்சிக்கு இண்டர்வல் விட்டு கற்சிலைக்குத் திரை போட்டதால் கூட்டம் குறைந்திருந்தது. மிக்க முயன்று நாங்களும் நல்லதொரு இடம் பிடித்தோம். திரை விலகியது. கற்சிலை தெரிந்தது.

அச்சமயம் பார்த்து அருகில் இருந்த ஓர் பெண்மணி அம்மனை அவள் மகனுக்குக் காட்டும் அவசரத்தில் என் மனைவியையும் மகளையும் தள்ளினாள். முதல் முறை நான் சட்டை செய்யவில்லை. உள்ளே இருப்பது அபிராமியாய் இருந்து வெளியே பார்ப்பது அக்னிபாரதியாய் இருந்தால் சட்டையே செய்திருக்க மாட்டேன். இரண்டாம் முறை அந்த பெண்மணி மூர்கமாய்த் தள்ளினாள். இடையறாது நாராயண நாமமே சொல்லும் நாரத முனியே கையில் ஒரு கிண்ணம் எண்ணெய் பிடித்ததும் நாராயணனையே மறந்தான். நான் நாரதனும் இல்லை. என் கையில் இருப்பது வெறும் எண்ணெய்க் கிண்ணமும் இல்லை - குடும்பமும் குழந்தையும்.

இம்முறை சினம் தலைக்கேறியது. "ஏனம்மா இப்படி மாடு போல் வந்து விழுகிறாய், குழந்தை இருப்பது தெரியவில்லையா?" என்று நாவினால் வடு சுட்டேன். எப்பொழுதும் போல் இது போன்ற சண்டை வரும் நேரத்தில் மனைவி அங்கிருந்து அகன்று விட்டாள். எப்பொழுதும் போல் நின்று சண்டை போடும் நானும் ஏனோ உடனே அகன்று விட்டேன்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளே நினைவாக இருந்த பட்டனுக்காக அமாவாசையில் பௌர்ணமியைக் காட்டியது போல் சிறிய அதிசயம் அல்ல. அவளை மறந்த ஒரு அற்பனுக்காக நிகழ்த்திய பெரிய அதிசயம்.

வெளியே தனியே வீற்றிருந்த அபிராமி நாங்கள் அவ்விடம் வரும் நேரம் பார்த்து எங்கள் புடவையை அணிந்து கொண்டிருந்தாள். "இதோ பாரடா நானும் உன் குல தெய்வம் தான், உன் காதலி தான், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையைச் சூடி மகிழ்ந்தவனின் தங்கையடா நான்" என்று சொல்லும் வண்ணம் பூசாரியைக் கொண்டு சீலையை அணிந்து கொண்டிருந்தாள்.

உள்ளே கருவறையில் தேடிக் கொண்டிருந்த என்னை வெளியே கொண்டு வந்து "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரனானந்தமே" நான் எனக் காட்டிய அழகைச் சொல்லவா? இல்லை நான் கவிஞன், உலகமே எனது தமிழால் அவளுக்கு அணி சூட அவளால் படைக்கப்பட்டது என்பதை மறந்து கேவலம் நூல் சீலையை அவளுக்கு அணிவித்து அழகு பார்க்கும் ஆசையையும் உடனே தீர்த்த கருணையை சொல்லவா?

அன்னையே அபிராமியே அழகியே அமுதமே, இனி நான் என்ன சொல்வேன்? சொல்வதெல்லாம் அன்றே பட்டன் சொல்லி விட்டான்.

"கூட்டியவா என்னைத் தம் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே"

இனிமேல்

"விழிக்கே அருளுண்டு அபிராம வள்ளிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து  பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்ம்மோடு என்ன கூட்டினியே?"

Wednesday, August 27, 2014

ஆறு


புவிஎன்னும் சிறுதுளை துவங்கிக்  கசிந்து
வளியென்னும் வான் அமைந்த நிலமெல்லாம் நடந்து நெஞ்சத்துக்
குழியென்னும் கரையோடு ஓடி கரையெல்லாம்
கவியென்றும் கதையென்றும் வளம்பெறச் செய்து வெட்ட
வெளியென்னும் ஆழி சேர்ந்து அமைதியில் அமையும்
வளியென்னும் உயிர்மூச்சும் நமக்கொரு ஆறாமே.

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/river-called-breath.html

Thursday, August 07, 2014

வரலட்சுமி விரதப் பாட்டு


வர வேண்டாம் வரலட்சுமி நீ வர வேண்டாம்  வந்து
வரமொன்றும் தர வேண்டாம் அம்மா தர வேண்டாம் 

தர வேண்டாம் தரணியிலே செல்வமும் புகழும் எனக்கு 
வர வழியேதும் செயல் வேண்டாம் வரலட்சுமி நீ (வர வேண்டாம்...)

வரம் வேண்டிக் காத்திருப்போர் பலருண்டு பரந்த இத் 
தரணியிலே அவரிடம் போய் நீயுன் அருள் மலர்க் 
கரம் நீட்டிக்  கனிவோடு அருள் புரிவாய் தாயே உனக்குமது 
அறம் செய்யும் வழியாகும் உய்வும் உண்டாகும் எனவே (வர வேண்டாம்...)

வரம் வேண்டாம் வரமொன்று நான் வாங்கி விட்டேன் என்றும் 
சரண் என்று சக்தியவளை நம்பிவிட்டேன் இனியிங்கு எனக்கு 
மரணமே வந்தாலும் வரமாகுமன்றோ மாற்றெதுமுண்டோ அரி 
அரனுக்கும் மேலான வரமிதுவன்றோ எனவே (வர வேண்டாம்...)

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/a-song-for-varalakshmi-viratham.html

Wednesday, May 21, 2014

நாய்ச் சண்டை

நிலமுனதே தூனாகி நின்ற கல்லுனதே
பலவாய்க் கொன்ற மரமுன் சேயே காட்டின்
களத்தில் கொன்று விரட்டிய விலங்கும் உன் அன்பே
அங்கே

பலவாய் ஆலயம் செய்து பகை கொண்டு கொலைக்
களமாய் நிலம் செய்து மாக்கள் தாம் மாய்ந்தனரே

பிறை சூடும் பிச்சைப் பெருமானே பித்தனே
இறையறுக்கும் புலையன் இருதுண்டு எரிய
குரைக்கும் நாய்கள் தாம் சண்டையிட்டால்
உறைக்கவோர் முறையேது? முடிவேது?

English - http://agnibarathi.blogspot.com/2014/05/dogs-quarrel.html


Saturday, May 03, 2014

ஏன்


இறைவன் ஒருவன் நானறிவேன்
மறைவாய் உரைவதவன் என் மனத்தே
மறையும் ஒன்றே நானுரைப்பேன்
நிறைவாய் நின்றதோர் அமைதியிலே

ஒன்றே தொழுகை நானும் புரிவேன்
என்றும் வாழும் வாழ்க்கையதுவே
ஒன்றேயமுதம் நான் பெரும் பரிசு
நன்றாய்ப் பொழியும் கவி  என்னும்தேன்

இறைவன் ஒருவன் ஒன்றாயிருக்க
அறியாக் கல்லும் மலரும் பெயர்த்து
முறையாய்க் கோவில் தொழுகை செய்து
பிரிப்பேன் ஏனோ என்னிடம் அவனை

ஆங்கிலத்தில் - http://agnibarathi.blogspot.com/2014/05/why.html

Monday, April 28, 2014

என்னவர்


நீரில் நீந்தும் மீன் என் உறவே
நானும் கருவில் நீந்தியதாலே

ஊறும் தவழும் உயிர் யாவும் உறவே
மண் மேல் நானும் ஊறியதாலே

நாற்கால் நடக்கும் விலங்கெல்லாம் நட்பே
தவழ்ந்து தவழ்ந்து தேடியக் காலே

இருகால் நாரை குரங்கும் எமதே
இன்றும் நான்புவியில் நடப்பதாலே

நொடியில் இறக்கும் ஈசலும் உறவே
என் இமையிரண்டும் இமைப்பதாலே

பறந்து திரியும் புள்ளெல்லாம் தோழர்
தமிழொடு என்மனம் பறப்பதாலே

கதிரைக் குடிக்கும் செடிகொடி உறவே
தவத்தில் நான் கதிர் அருந்தியதாலே

தவத்தில் நிற்கும் நெடுமரம் கேளிர்
என்கதை தவமே கனியும் பாரீர்

நீள்கடல் மலைநதி யாவும் என்கூட்டம்
என்றும் என்கவி இசைப்பதாலே

எல்லாம் எல்லாம் எல்லாம் என் உறவே - இனியும்
என்தாய் என்சேய் என்னவர் என்ற
எண்ணமுமேதே?

In English - http://agnibarathi.blogspot.hk/2014/04/my-clan.html

Tuesday, August 20, 2013

காயத்ரி ஜபம்


இடக்கண் திறந்து இறந்த காலம் நோக்கி
இயம்புவன் அவளை நினைவாய் நினைத்து

வலக்கண் திறந்து வாழும் காலம் நோக்கி
வணங்குவன் அவளை அறிவாய் அறிந்து

நடுக்கண் திறந்து நாளை நோக்கி
நாடுவன் அவளை கற்பனை அமைத்து

முக்கண் திறந்து முடிவில்லாக் காலத்திணைந்த
மூவுலகும் கண்டு துதிப்பேன் அவளை சக்திஎனப் பாடி

முக்கண் மூடி மனத்தேயொன்றி முக்காலம் மறைந்து
எக்காலமும் ஏற்றுவன் அவளை நான் எனும் பெயரால்

In English - http://agnibarathi.blogspot.in/2013/08/gayatri-japam.html

Tuesday, June 25, 2013

செய்க வினை


செய்க விணை செய்க விணை செய்க விணை செய்கவே - என்றும்
தோய்வின்றி சோர்வின்றி துயர் நீங்க துணிவோடு தவமாக (செய்க)

பொய்யுரையோம் புறம் பேசோம் பயமழிப்போம் விணை செய்தால்
உய்வடைவோம் உயர்வடைவோம் உயிர் வாழ்வோம் எனவே என்றும் (செய்க)

விணையல்லால் இங்கு நமக்கோர் வழியில்லை வாழ்வில்லை
விணை செய்தால் நமக்கென்றும் வலியில்லை சாவில்லை நமக்குத்
துணை நாமே நம் விணையே அவளுரைக்கும் நல்விணையே எனவே
திணையே ஆனாலும் துயர்  நீங்க  துணிவோடு தவமாக (செய்க)

தவமாகும் செய்த வினை தாயவள் துணையிருந்து தவத்திற்கு
வரம் தருவாள் வழியுரைப்பாள் விணை தீர்ப்பாள் வளம் செய்வாள்
அறத்தொடு அன்பும் அழகும் அகத்தே கொண்டு அயராது விணை செய்தால்
அவள் அருள் புரிவாள் அகத்திருப்பாள் அணைத்திருப்பாள் எனவே (செய்க)

Monday, April 29, 2013

கல்யாணி



In plain text

யாம் யார் ஏன் வந்தோம் எங்கு செல்வோம் என்பதறியா

யாம் யாமே வந்து விட்டோம் செல்லவும் செய்வோம்
என உரைத்து ஓம் இஃதே வழி  இஃதே என உணர்வாயா

யாம் படைத்த மகனே எனைப் படைக்கும் படைப்பே
பேறு பெற்றிட்ட பரசிவக்குளத்தில் மூழ்கி உரைப்பாயா

யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே

யாம்

ஓம்

பி.கு: 

1. கவிதையை செப்பனே வரைந்திட பல முயற்சி மேற்கொண்டு கை வலிக்க எழுதிய வைதேஹிக்கு பல நன்றிகள்!

2. கவிதையின் தலைப்பு "கல்யாணி" என அமையும் காரணம் அறிய படிக்க https://en.wikipedia.org/wiki/Temple_tank

Monday, March 25, 2013

பித்தன் (பட்டன்) கதை




திருக்கடவூரில் சுப்ரமணியம் என்றொரு பித்துப் பிடித்த அந்தணன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு பெரும்பாலும்,

கண் காணாது.
செவி கேளாது.
வாய் பேசாது.

எப்பொழுதும்,

நா சுவைக்காது.
நரம்பு உணராது.

இப்படியிருந்த இந்த அந்தணனை

எள்ளுதலும்
நகையாடுதுலம்
கேலி பேசுதலும்

ஊர் வழக்கு.

இது எதுவும் அறியாத அவன்

நாளும்
பொழுதும்
காலமும்

மறந்து

நிலத்திலும்
நீரிலும்
நெருப்பிலும்

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான், அதனால் அதனை மட்டும் கண்டிருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே கண்டிருந்தான் அதனால் அதனை அவன் விண்டாதிருந்தான்.

அவ்வண்ணம் கண்டும் கண்டதை விண்டிலாதும் இருந்த அப்பித்தனை

மராத்த  மன்னர்,
தஞ்சை கொண்ட தரணியரசர்,
வீர சிவாஜி வழி வந்த வீர வேந்தர்,
கலை வளர்த்த காவலர்,
நூலகம் தந்த நாவலர்,
பகைவர் அஞ்சும் பகலவர்

காண நேர்ந்த்தது. பித்தன் என பலரும் ஏசும் இம்மனிதன் பயமின்றித் தன வழியே  இருத்தல் கண்டு,

"யார் இவன்? எவறிவார்? எவருரைப்பார்?"

என வினவ, கூடியிருந்த மக்காள்,

பித்தன்
பெருமான்
புலவன்
பக்தன்

என் பல கூறினர். குழம்பிய மன்னன், பித்தனிடமே,

"யார் நீர்?", என வினவினார்.

.
.
.

மீண்டும், "பெயர் என்ன?" என் வினவினார்.

.
.
.

பின்னரும், "ஏதும் அறிவீரோ?" என்றும் வினவினார்.

.
.
.

கடைசியில், "இன்று திதி யாது?" என்று வினவினார்.

அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தன்

கண்டான்.
கேட்டான்.

'முழுமதியோன்றே! முழுமதியோன்றே! முழுமதியோன்றே!' என்று பேசினான்.

'இருட்டில் நிலவினைக் கண்டீரோ. பித்தன் தாம் போலும். முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக' என்று  நகைத்து மன்னன் நகர்ந்தான்.


அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தனுக்கு,

கண்டதும்
கேட்டதும்
பேசியதும்

பொய் எனத் தோன்றவில்லை. வாள் கையில் ஏந்தி, அன்னை முன் சென்று

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என இடையறாது மனதிற் துதித்தான்.

துதியினூடே பித்தம் சித்தத்திலேறி பாட்டு பலவும் படித்தான்.

பாட்டினூடே பரசக்தியவள் அவன் முன்னே தோன்றினாள்.

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என்று சொன்னவன்,

"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"

எனக் கூவினான்.

அதன் பின்னர் அவன் பிதற்றிய பாடலைப் புகழ்ந்தனர் பலர்.
அவன் பாடிய அன்னையைப் புகழ்ந்தனர் பலர்.
அவனை ஏசிய மன்னனை ஏசினர் சிலர்.

நிலவு வந்ததா? அம்மாவாசை இரவு பௌர்ணமி ஆனதா? பித்தன் கூற்றை பராசக்தி பலிக்கக் செய்தாளா?

பராசக்தியைக் கண்ட பின் பித்தனுக்கே அதில் அக்கறை இல்லை.

நமக்கேன்?


பாட்டின் புகழ்


வையத்து மாந்தர்காள் கேளீர்
வையத்தில் உண்டு வாழ வைக்கும் அமுதமொன்று!

சிந்தைதனை மத்தாக்கி ஆசைக் கடலிடை
சித்தமதை அரவமாய்க் கட்டி
இன்பமோர் புறம் துன்பமோர் புறம் பற்றி
பற்றற்ற அகத்தினிலே பரமனையிருத்தி

பல காலம் இழுத்தோர் வேள்வி செய்தால்...

விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!
மிடிமையும் அச்சமும் சோர்வும் கவலையும் கலந்த
விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!

அதனை

அப்படியே அருந்தி அகத்திலே இருத்தி
அமைதியாய் பொருத்தி அசையாது கொண்டால்

அமுதம் தோன்றும்! ஆம்! ஆம்!
அமுதம் தோன்றுமே! ஆகா!
அது நித்தம் தோன்றுமே!
இங்கும் அங்கும் தோன்றுமே!
அமுதம்
இன்றும் என்றும் தோன்றுமே!

அமுதத் தமிழ் கவிதையது ஆசைக் கடல் அடியிருந்து
அழகாய் அறிவாய் இசையாய் சொல்லாய் பொருளாய்
கருத்தென்னும் கலசத்திலே காதலென்னும் கன்னியவள் ஏந்தி வர

அமுதமது  தோன்றுமே!
பாட்டென்னும் அமுதமது தோன்றுமே!
நாம் பழுதின்றி பருகிடப பல்சுவைப்
பாட்டென்னும் அமுதமது

அரியவன் அன்னையாய் அன்னையே அப்பனாய்
அழகென்னும் மோகினியாய் நமக்கு மட்டுமே
பகிர்ந்துப் பருகிடத் தர
பராசக்தியவளைக் கண்டப் பரவசமாய்
பாட்டெனும் அமுதமது பழுதின்றித் தோன்றுமே!

அதனைப் பருகி பருகி
பரவசமாகி
சொல்லிழந்து
பொருளிழந்து
அறிவிழ ந்து
கருத்திழந்து
சித்தமிழந்து
தன்னையே தானிழந்து
கண் திறந்து பார்த்தால் எல்லாம்

ரசம்! ரசம்! ரசம்!

Thursday, January 24, 2013

திண்ணம்



அன்றொரு நாள் இளமைத் தீயில்
சுட்டெரித்தேன் பற்பல வாச மலர்களை

மல்லிகைக் காதல்
செம்பருத்தி மோகம்
தாமரை அறிவு

இன்று வயது கூடுகிறது
எழுத்தாணி முனையில்
பழஞ் சாத்திரத்தின் பனையோலைகள்
எரிந்து சாம்பலாகின்றன

எது எப்படியோ
எரித்தல் திண்ணம்
எரிவதும் திண்ணம்

In English - http://agnibarathi.blogspot.in/2013/01/destiny.html


Saturday, January 05, 2013

வரம் தாரும்


பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

இறப்பும் இனிமையே நீர் படைத்த உலகில்
சிறப்பும் செல்வமும் சுடர் தரும் கதிரும்
துறவும் துயிலும் துன்பமும் துயரும்
பரவும் நின் படைப்பில் மீண்டும் (பிறக்கும் வரம்...)

நெல் நட்டு நல்லரிசி பயிர் செய்யும் உழவனாய்
சொல் நட்டு சுடரோடு விளையாடும் புலவனாய்
தொல்  கடலில் துணிந்தோடி திரிவியம் தேடு வணிகனாய்
அல்லலும் அமைதியும் அமுதென பலவாறு அள்ளிக் குடிக்க (பிறக்கும் வரம்...)

முக்தியொன்றும் தேவையில்லை முக்தியொன்றும் தேவையில்லை
சித்ததிற்கொர் விருந்தாம் சாகா மருந்தாம் வாழ்விதனில் பரா
சக்தியவளும் தேவையில்லை செந்தமிழ்ப் பாட்டதனின்
தித்திப்பே போதும் பாடல் செய் புலவன் பெயர் தேவையில்லை

எனவே

பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

Tuesday, November 20, 2012

மணம்


இரவென்னும் மங்கைக்கோர் வாசமுண்டு - அவள்
கரம்பற்றி கட்டியிழுத்து முகர்ந்து பார்த்தால்
தெரியும் அது மௌனமென்று

In English