
காலைப் பொழுது
மீண்டும்,
இன்னுமொரு காலைப் பொழுது
என்று
தள்ள முடியா
காலைப் பொழுது
இது
கவிதை கேட்கும் காலைப் பொழுது
இரவுக் குழந்தை
விழித்து
விடிந்து
கண் திறந்து
தெளிந்து
பகலாய்ப் பிறந்து
கதிராய் விரிந்து
பின்
என் சாளரம் வந்து
விழி தீண்டி
உயிர் தொட்டு
கவிதை கேட்கும் காலைப் பொழுது
குயிலிடம் பாட்டும்
மலரிடம் ஒளியும்
விண்ணிடம் இசையும்
நேற்றைய
நிலவிடம் மணமும்
பெற்று
என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது
தவம் செய்து...
இரவெல்லாம் தவம் செய்து
வரமாய் என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது
இனி
நாமோர் தவம் செய்வோம்.
தொழில் செய்து, உழன்று
இன்பம் சிலவும் துன்பம் சிலவும் கண்டு
வியர்வை ஒரு துளி சிந்தி
தொழில் செய்து
தவம் செய்வொம்.
தவம் செய்தால்,
இரவோர் வரம் தரும்.
கவிதை என்று
ஓர் வரம் தரும்.
அவ்வரந்தனை இரவல் தருவோம்
இரவலாய்
கவிதை கேட்கும் இந்த காலைப் பொழுதிற்கு