Friday, September 25, 2015

உயிர் வளர்த்தல் (Or how to grow life)

1. அசையாதிருப்பின் அன்னை முலை சுரந்த பால் அசைந்தால்
இசையாய்ப் பொழியும் இன் தமிழ்ப் பால்

2. கதிரைக் குடிக்கும் குணமின்மையால் மானுடர்க்குக்
குதிரில் சேர்த்த மணியே உணா

3. கூர்கோடு நீள்நகம் குறுவயிறு ஆநோக்கின்
நீர்ஊறும் நாவாகும் ஊன் உண்ணியின் குறி

4. உழுது உயிர் ஓம்பி உண்பதே உணவாம் மற்றாங்கே
பழுதாம் பண்பழிக்கும் பல்லுயிர்க் கொலை

5. இன்பம் என்பது இன்கனி பறித்தல் ஈருயிர்க்கும்
துன்பம் தருவதன்றோ உயிரைக் கொன்றுணல்

6. துன்பம் உலகிற் ஏற்பட ஏதுவெனின் ஏதுவின்றி
இன்பம் பொருட்டு இன்னுயிர்க் கொலல்

7. கொன்றழிப்பான் உடல் சேறும் ஊன் ஊறித் தானே 
நின்றழிக்கும் நஞ்சாகி விடும்

8. இறையும் மறையும் பரிந்து கூறினும் கொள்ளற்க
இரையென இன்னோர் உயிர்

9. பயிரே எனினும் உயிர் உணர்வான் ஊன் உண்ணான் உண்பான்
உயிரே எனினும் அழிப்பான் உயிர் மறுத்து

10. கொன்றே ஒட்டும் உயிர் உடம்புடன் எனில் அதனில்
நன்றேயாம் உடல் ஊண் ஆதல்

Meaning:

1. As long as you do not move, you drink milk from your mother's breast
Once you move you drink the music of Tamil
(Implied, why do you need other milk?)

2. Since men do not have the ability to drink sunlight
it is deemed that they eat grains stored in granaries

3. Sharp teeth, long claws, small stomach, when seeing a (live) bovine (or other appropriate prey)
salivating - these are the signs of a carnivore
(Implied, since humans have non of these signs, they should not kill and consume)

4.  To plough, nurture life and then eat is food, otherwise
faulty it is to practice killing and eating which destroys character.

5. Joy is plucking a fruit (off a tree) for both lives (the killer and the killed)
trouble it is to take the joyful life of another

6. The reason for suffering in this world is sans need (reason)
we kill for mere pleasure

7. The meat that goes into the body of one who kills and eats shall rot in it
and itself become venom that shall destroy him over time.

8. Even if god and the scriptures prescribe it
do not take another life as your food

9. Even in a plant he who eats not meat shall sense life (and therefore consider its pain)
Whereas he who eats meat shall deny life and kill a being which clearly has life (or sentience)

10. If only by killing (and eating) your body and soul will stay together
it is better your body becomes food (for the worm)

Thursday, September 17, 2015

களிற்றுக்குக் கவிதை

பிடி[1]யினைப் பிடித்திட வழி செய்த களிறே உன்தன்
வடிவினை நினைத்திட நீங்கிடும் இடரே
துடியிடை பனிமுலைப் பாவையின் சேயே மண்ணில்
அறிவென அழகெனத்  தோன்றிடுவாயே

ஆண்டியின் ஆசைக்கெதிர்நின்ற வேழா
ஆண்டியாய் தம்பியை செய்திட்ட தோழா
வேண்டிய நொடியினில் வரம் தனைத் தருக
தோன்றிய மண்ணினில் துளிராய் எழுக

தளிர் மஞ்சள் அரைத்துக் கையினில் பற்றி
துளிர் விரல் கொண்டு களி தரும் சக்தி
வளியிணை ஊட்டி வளர்த்திட்ட வடிவா
துளிரினில் துய்த்து மலரென வா வா

அலர் கதிர் சாயல் அம்மையின் வீரா  
வளர் பிறை அன்ன கோட்டு[2]டை சூரா
நலம் பல  நவம் பல நாட்டினில் இடுக
மலரினில் கனிந்து சுவையெனப் படுக 

பனிமலை உறையும் பரமனின் பிள்ளாய்
எலி நரி பரி[3] கரி[4] எதிலும் உள்ளாய்
துணிவென துணையென வந்திடும் அழக
கனியெனக் கனன்று விதையெனப் படுக

விதையென ஓமென விளங்கிடும் பொருளே
வினையினில் விளைந்திடும் வேள்வியின் தெருளே
கதை கவி செய்திடும் காதலின் தீயே
விதையென மண்ணில் முடிந்திடுவாயே

அருஞ்சொற் பொருள் விளக்கம் 

[1] - பெண் யானை, இப்பாடலின் வரையில் பெண் யானை போல் நடையுடைய குறவள்ளி
[2] - தந்தம்
[3] - குதிரை
[4] - யானை 

Tuesday, September 08, 2015

மடமை

மடுத்து மாட்டின் மடி சுரந்த பாலை
தடுத்துக் கன்றிர்க்குக் கிட்டாமல் செய்து
குடத்தில் நிரப்பிக் கல்லுக்கு இடல் - முறையே
நடந்து நாற்றிற்குத் தான் செல்லும் நீரை
கடத்திக் கனவினிலே கனவாய்க் கண்ட
படத்தில் வரைந்த பயிருக்கிடல்

Saturday, September 05, 2015

நிந்தை

முன்னொரு காலத்தில் எழுதிய கவிதைகள் இவை. தாகூரின் "Stray birds"ஐத் தழுவியவை. அப்பொழுது அவளோடு எனக்கு நெருக்கம் அதிகம். எனவே உரிமையோடு விளையாடியதால் வந்த "வினை".

பி.கு: பாடல்களின் பொருள் புரியாவிட்டால் பதிவில் குறிப்பிடவும். விளக்கம் தருவேன். 

நள்ளிரவின் இருட்டில்
தோடு கழற்றிக் கேட்டாள்
நிலவு தெரிகிறதா?

---


வேட்டை முடித்து தோலுரித்து
வீடு வந்தவனைக் கண்டு
பிள்ளையைக் கொல்வீரோ என அஞ்சினாள்

---


காலால் காதைத் தொட்டான்
கொல் எனச் சிரித்து சொன்னாள் வெற்றி
எனதே அரை மனிதா

---


கூந்தல் முகர்ந்து
தள்ளிச் சென்றவனைக் கேட்டாள்
தாழம்பூ வாசமோ?

---


பாதம் பற்றி
மெட்டி இடுகையில்
நாக்கை நீட்டினாள்

---


நிலவில் கள் குடித்து
அவனிடம் சொன்னாள்
நான் பிடித்த ஆளுக்கு மூன்று கண்

---


மாங்கனியே என்றான் ஆசையோடு
பதறி எழுந்தாள்
பிள்ளை கோபிப்பான் என்று

---


கையில் நெறுப்பள்ளிக் கொடுத்தாள்
தலையெல்லாம் ஈரம்
பனி வேறு பொழிகிறது

---


குரல்வளையைக் கையால்
இறுக்கிப் பிடித்தாள்
கொலையும் செய்வாள் பத்தினி

---


நகங் கிள்ளாது இருப்பவளிடம்
சொன்னான் தமையன் மேல் பரிவோ?

---


வண்டியேறி வந்தவளைப் பார்த்து
எச்சரித்தான் மாடு மிரளப் போகிறது

---

மகிழ்வுடன் மணம் புரிய சம்ம்மதித்தாள் 
மாமியார் தொல்லை இல்லை

---


அவன் அவளை நோக்க 
கொங்கை இடை நின்ற 
ஆரம் கசன்றது 

---


காதல் இரவினில் 
அவன் திலகம் சூடினான் 
அவள் சாம்பலணிந்தாள்

---

வினா விடை

கவிஞன்:

பகலெல்லாம் வியர்க்க வினை பல செய்து
பணி பல புரிந்து மாலை மழையில்
நனி நீராடி நறுமலர் சூடி
மின்விழிப் பூத்துக் காத்திருக்கும் நிலமே

உன் காதலன் யார்?
இரவா? நிலவா?
அமுதா? தமிழா ?
கவியா? துயிலா?

காதல் களித்துக் கலவி பயின்று
நீ கண்ட கனவுகள் தான் என்ன?
எழுதிய கவிகள் யாது?

நிலம்:

காதல் ஒன்றே நானும் கொண்டேன்
காதலர் பலராம்எம்ம்மார்பினிலே எம்மார்பினிலே
காதல் உயிரே காதலர் உடம்பே
காதலர் மாறினும் காதல் ஒன்றே

இரவும் நிலமும் அமுதும் தமிழும்
துயிலிற் நான் கண்ட கனவின் உருவே
துயிலும் விழிப்பும் கனவும் கவியும்
காதல் என்னும் கடவுளின் களியே

பகலினிற் உழைத்தல் மாலை மழையில் நனைதல்
மலர் அணி அணிதல் மாலையிற் களித்தல்
இரவினில் மரித்தல் இறுதியில் எரிதல்
இன்னும் நிகழ்தல் எல்லாம் இங்கு
காதல் காதல் காதல் ஒன்றே