Wednesday, August 27, 2014

ஆறு


புவிஎன்னும் சிறுதுளை துவங்கிக்  கசிந்து
வளியென்னும் வான் அமைந்த நிலமெல்லாம் நடந்து நெஞ்சத்துக்
குழியென்னும் கரையோடு ஓடி கரையெல்லாம்
கவியென்றும் கதையென்றும் வளம்பெறச் செய்து வெட்ட
வெளியென்னும் ஆழி சேர்ந்து அமைதியில் அமையும்
வளியென்னும் உயிர்மூச்சும் நமக்கொரு ஆறாமே.

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/river-called-breath.html

Thursday, August 07, 2014

வரலட்சுமி விரதப் பாட்டு


வர வேண்டாம் வரலட்சுமி நீ வர வேண்டாம்  வந்து
வரமொன்றும் தர வேண்டாம் அம்மா தர வேண்டாம் 

தர வேண்டாம் தரணியிலே செல்வமும் புகழும் எனக்கு 
வர வழியேதும் செயல் வேண்டாம் வரலட்சுமி நீ (வர வேண்டாம்...)

வரம் வேண்டிக் காத்திருப்போர் பலருண்டு பரந்த இத் 
தரணியிலே அவரிடம் போய் நீயுன் அருள் மலர்க் 
கரம் நீட்டிக்  கனிவோடு அருள் புரிவாய் தாயே உனக்குமது 
அறம் செய்யும் வழியாகும் உய்வும் உண்டாகும் எனவே (வர வேண்டாம்...)

வரம் வேண்டாம் வரமொன்று நான் வாங்கி விட்டேன் என்றும் 
சரண் என்று சக்தியவளை நம்பிவிட்டேன் இனியிங்கு எனக்கு 
மரணமே வந்தாலும் வரமாகுமன்றோ மாற்றெதுமுண்டோ அரி 
அரனுக்கும் மேலான வரமிதுவன்றோ எனவே (வர வேண்டாம்...)

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/a-song-for-varalakshmi-viratham.html